எஸ்டிபிஐ கட்சியின் தொழிற்சங்க பிரிவான எஸ்டிடியூ தொழிற்சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம், திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ் மாநில தலைவர் ஹசன் பாபு தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து அடுத்த மூன்று ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர். இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு முன்னதாக எஸ்டிடியூ தொழிற்சங்கத்தின் மாநில தலைவர் ஹசன்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்:--
தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் இந்த நான்கு புதிய சட்டத் தொகுப்புகளையும் வீழ்த்தும் வரை, அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து நாடு தழுவிய அளவில் எஸ்டிடிடியூ மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கும்.மினி பொதுத்தேர்தல் போல் நடைபெற்ற சில மாநிலங்களின் தேர்தல் முடிவடைந்தவுடன், "விலையேற்றம் செய்ய மாட்டோம்" என்ற வாக்குறுதியை மீறி ஒன்றிய அரசு கேஸ் சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் கடுமையாக உயர்த்தியுள்ளது. இவர்களின் தவறான வெளியுறவுக் கொள்கையின் தோல்வியால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்பை, மக்கள் தலையில் சுமையாக ஏற்றியுள்ளனர். இந்த மக்கள் விரோத விலையேற்றத்தைக் கடுமையாகக் கண்டிப்பதுடன், இதனை உடனடியாக வாபஸ் பெறும் வரை அடுத்தகட்டப் போராட்டங்களை தொடருவோம்.
ரயில்வே துறையை கார்ப்பரேட் மயமாக்கும் நோக்கில், சுமார் 30,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில், இடமாற்றம் என்ற பெயரில் அவர்களின் வேலைகளைப் பறிக்கும் செயலில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. இத்தகைய நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும்.
தமிழகத்தில் தங்களின் சொந்த முதலீட்டில் சுயதொழில் செய்து வரும் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கடந்த 20 ஆண்டுகளாக மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாததால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு உடனடியாக தலையிட்டு, ஆட்டோக்களுக்கான ஆரம்பக் கட்டணத்தை (குறைந்தபட்சக் கட்டணம்) மாற்றியமைக்க வேண்டும்.
ஆட்டோ மற்றும் டாக்ஸி தொழிலாளர்களைப் பாதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஓலா (Ola), ஊபர் (Uber) போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் செயல்பாடுகளைத் திரும்பப் பெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் வகையில், இருசக்கர வாகனங்களில் (Bike Taxi) பயணிகளை ஏற்றிச் செல்லும் சட்டவிரோத முறைகேடான திட்டத்தை முழுமையாகத் தடை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.







0 Comments