BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** தமிழ் வளர்த்த சான்றோர்கள் சிந்தனை கருத்தரங்கம்

தமிழ் வளர்த்த சான்றோர்கள் சிந்தனை கருத்தரங்கம்

 பாரம்பரியப் பெருமைகள் நிறைந்த திருச்சிராப்பள்ளி தேசியக்கல்லூரியில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட சான்றோர்களின் செயல்பாடுகளை வருங்காலத் தலைமுறையினராம் மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் "தமிழ் வளர்த்த சான்றோர்கள்" எனும் தலைப்பில் சிந்தனை அரங்கம் நடைபெற்றது.


இதில் தேசியக்கல்லூரியின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் இரா.சபாபதி , சங்கரா மெட்ரிக்குலேசன் பள்ளியின் தமிழாசிரியை திருமதி மு.ஜெயலெட்சுமி ,தமிழ்த்துறையின் முனைவர்பட்ட ஆய்வாளர் செ.மணிகண்டன்,இளங்கலை மாணவி பொ.மகாலெட்சுமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.


இவர்கள் தம் உரையில்"தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் ஓலைச்சுவடிகளில் ஒளிந்திருந்த தமிழ் இலக்கியங்களைத் தேடித்தேடிப் பதிப்பித்த பாங்கினையும் ஒல்காப்புகழ் தொல்காப்பியமே இலக்கண நூல்களில் இன்றும் தலைசிறந்து நிற்கிறது எனவும் பாரதியார் மறைந்தே நூற்றாண்டுகள் கடந்த பின்பும் அவரின் கவிதைகள் பாப்பாக்கள் முதல் பெரியவர்கள் வரை சென்றடைந்த திறத்தையும் அதனால் தான் பாரதிதாசன் தொடங்கிப் பின் வந்த கவிஞர்களை "பாரதி பரம்பரைக் கவிஞர்கள்" எனப் போற்றிக் கொண்டாடுவதையும் சுட்டிக் காட்டினர்.




மேலும் வள்ளுவர்,கம்பர் வகுத்தளித்த வாழ்வியல் நெறிகளையும் தேவார மூவர் முதல் வடலூர் வள்ளல் வரை தமிழுக்குத் தந்த கொடைகளையும் தங்கள் உரையில் கூறினார்கள்."மீனாட்சி சுந்தரம்பிள்ளை,கதிரேசன் செட்டியார் ,சுப்புரெட்டியார்,இராகவ ஐயங்கார்,கல்கி கிருஷ்ணமூர்த்தி,ஜெயகாந்தன்,கவிமணி,நாமக்கல் கவிஞர் என்று தமிழ் வளர்த்த சான்றோர்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காது.இவர்கள் அனைவருமே சாதி,இனம்,வருணம் என்று வேறுபட்டிருந்தாலும் தமிழ் மொழியைத் தங்கள் உயிராய்க் கருதி வளர்ப்பதில் ஒன்று பட்டே நின்றனர் என்பதையும் இந்த நிகழ்சியில் பேசிய அனைவருமே எடுத்துக் கூறினர்.

முன்னதாக கல்லூரியின் முதல்வர் முனைவர் கி.குமார் தலைமையேற்ற இந்நிகழ்வில் தமிழ்த்துறைத்தலைவர்&கலைப்புல முதன்மையர் முனைவர் ந.மாணிக்கம் வரவேற்க, துறைத்துணைத்தலைவர் முனைவர் சி.காந்தி வாழ்த்துரை கூற ,நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் க.புவனேஸ்வரி நன்றி நவில விழா இனிதே நிறைவு பெற்றது.

Post a Comment

0 Comments