திருச்சி கண்டோன்மென்ட் காவேரி மருத்துவமனையில் நவீன வசதிகளை உள்ளடக்கிய தீக்காயப் பிரிவு தொடங்கப்பட்டது. இதன் மூலம் டெல்டா பிராந்தியத்தில் முழுநிலை தீக்காயப் பிரிவு வாய்ந்த ஒரே தனியார் மருத்துவமனையாக காவேரி மருத்துவமனை மாறியுள்ளது. இப்பிரிவு பெரியவர்களுக்கான சிகிச்சையை வழங்கும். குழந்தைகளுக்கான தனி தீக்காயச் சிகிச்சைப் பிரிவு ஏற்கனவே மா காவேரி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
காவேரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் மணிவண்ணன் செல்வராஜ் மற்றும் செயல் இயக்குநர் டாக்டர் டி. செங்குட்டுவன் ஆகியோரால் இப்பிரிவு திறந்து வைக்கப்பட்டது. பெங்களூரு மருத்துவக் கல்லூரியின் பிளாஸ்டிக் சர்ஜரி துறைத் தலைவர் பேராசிரியர். ஸ்மிதா செகு மற்றும் சென்னை ஈ.எஸ்.ஐ மருத்துவமனையின் பிளாஸ்டிக் சர்ஜரி துறைத் தலைவர் பேராசிரியர் ஏஞ்சலின் செல்வராஜ் ஆகியோர் தொடக்க விழாவின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் உரையாற்றிய காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் டி. செங்குட்டுவன், பல ஆண்டுகளாக இந்நிறுவனம் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான தீக்காயச் சிகிச்சைத் துறையில் செய்துள்ள முக்கிய பங்களிப்புகளை எடுத்துரைத்தார். மேலும், குழந்தை நோயியல், மயக்க மருந்து மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை ஆகிய துறைகளுக்கிடையேயான கூட்டு முயற்சியே இத்தகைய நோயாளிகளைக் காப்பாற்றுவதற்கு இன்றியமையாதது எனவும் வலியுறுத்தினார். கடந்த 10 ஆண்டுகளில், இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை காரணமாகவே, காவேரியின் குழந்தைகள் தீக்காய சிகிச்சைப் பிரிவு மிகக் கடினமான நிலைகளில் கூட மிகக் குறைந்த இறப்பு விகிதத்தில் பல நோயாளிகளைக் காப்பாற்றி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது என்றும் தெரிவித்தார்.காவேரி மருத்துவமனை, திருச்சியின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் எஸ். ஸ்கந்தா, கடும் தீக்காயம் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் காப்பாற்றுவதில் தனி தீக்காய சிகிச்சைப் பிரிவின் இன்றியமையாமையை விளக்கினார். ஒருங்கிணைந்த அறுவை சிகிச்சை அறை, அதனுடன் இணைக்கப்பட்ட உடனடி கவனிப்பு பிரிவு (ஐ.சி. யூ) மற்றும் படிநிலை சிகிச்சைப் பிரிவுகள் (ஸ்டெப் டவுன் யூனிட்), வரம்புக்குட்பட்ட நுழைவு மற்றும் குறுக்கு நோய்த் தொற்றைத் தடுக்கும் அதிகபட்ச மாசின்மை ஆகியவை இப்புதிய வசதியின் சிறப்பம்சங்கள் என்றும் விவரித்தார். திருச்சியின் சிறந்த வான் போக்குவரத்து இணைப்புகளால், சர்வதேச நோயாளிகளும் இந்த வசதிக்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு சிகிச்சை பெற முடியும் என்றும் அவர் கூறினார். டெல்டா பிராந்தியம் முழுவதும் தீக்காய சிகிச்சை பற்றிய விழிப்புணர்வைப் பரப்பவும், சிகிச்சை வசதியை விரைவாக அடைய உதவவும் ஒரு சிறப்பு தீக்காய சிகிச்சை உதவி தொலைபேசி எண் (ஹாட்லைன்) உருவாக்கப்படும் என்றும் அறிவித்தார்.
பேராசிரியர் ஸ்மிதா செகு மற்றும் பேராசிரியர் ஏஞ்சலின் செல்வராஜ் ஆகியோரும், அரசு மற்றும் தனியார் துறைகளில் தீக்காயச் சிகிச்சையில் உள்ள சவால்களைச் சுட்டிக்காட்டினர். இத்தகைய கடினமான சூழ்நிலைகளில் உகந்த முடிவுகளைப் பெற, அர்ப்பணிப்பு மற்றும் தனிப்பட்ட கவனிப்பின் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.காவேரியின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத் துறை ஒரு கற்பித்தல் நிறுவனமாகவும் உள்ளது. இது டி.என்.பி பிளாஸ்டிக் சர்ஜரி மேல்மட்ட நிபுணத்துவப் படிப்பை வழங்குகிறது. தென் தமிழ்நாட்டில் இச்சிகிச்சையை வழங்கும் முதல் தனியார் மருத்துவமனை காவேரி மருத்துவமனை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், எம்.எஸ். ஜெனரல் சர்ஜரிக்குப் பிறகு இந்த படிப்பை வழங்கும் மாநிலத்தின் இரண்டாவது நிறுவனமும் இதுவேயாகும். இந்த தீக்காயச் சிகிச்சைப் பிரிவு, அனைத்து நவீன உள்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதீத தீக்காயத்திற்கான சீரான சிகிச்சை முடிவுகளைப் பெற, காலவரம்பற்ற அர்ப்பணிப்புடன் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் உடனடி கவனிப்பு நிபுணர்களின் ஆதரவும் இப்பிரிவுக்கு உண்டு. தீக்காயச் சிகிச்சை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நாட்டின் சிறந்த வசதிகளுக்கு இணையான வசதிகள் தற்பொழுது திருச்சி காவேரி மருத்துவமனையில் உள்ளது என்பதை உணர்த்துவதற்காகவும்,ஒரு தொடர் மருத்துவக் கல்வி (சி.எம்.ஈ) நிகழ்ச்சியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


0 Comments