திருச்சி தேசியக் கல்லூரியின் தமிழ்துறை சார்பாக உவேசா பேரவை சிறப்புச் சொற்பொழிவு மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் துறை தலைவர் சி காந்தி வரவேற்புரை வழங்கினார். தமிழ் கூறும் நல் உலகில் பெருமை வாய்ந்த முனைவர் மாது அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சொற்பொழிவாற்றினார்.
தமிழ் படிக்கின்ற மாணவர்கள் தமது துறையின் பெருமையினை உணர்ந்து நல்ல முறையில் கல்வி கற்றால் வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலையினை அடைய முடியும் என்றும் உ வே சாமிநாத ஐயர் ஒரு மூட்டை உமியில் ஒரு நெல்மணியாவது கிடைக்காதா என்று தேடி தேடி தமிழை தொகுத்ததை போல வாழ்க்கையில் நாம் தேடிப் படிக்கின்ற ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு படியாக நம்மை உயர்த்தும் என்று குறிப்பிட்டார். மேலும் உலகத்தில் உள்ள ஏழு கண்டங்களில் ஆறு கண்டங்களுக்கு தாம் சிறப்பு விருந்தினராகச் சென்றதற்கு தான் கற்ற தமிழ் மட்டுமே துணை செய்ததாக எடுத்துரைத்தார். கம்பராமாயணத்திற்கு எண்ணற்றோர் உரை எழுதி இருப்பினும் உவேசா அவர்களின் உரையானது தனித்துவம் வாய்ந்ததாகவும் நுண்மான் நுழைபுலம் மிக்கதாகவும் திகழ்வதை சான்றோடு எடுத்துரைத்தார். தமது தந்தையார் தேசியக் கல்லூரியின் தமிழ்துறை பேராசிரியராக இருந்ததையும் தாம் என்று உலகின் தலைசிறந்த பேச்சாளராக திகழ்வதற்கும் தேசியக் கல்லூரி காரணமாக இருந்ததையும் தமது சிறப்புரையில் எடுத்துரைத்தார். நிறைவாக பேரவை துணைத் தலைவர் முனைவர் இரா பத்மா நன்றியுரை வழங்கினார். தமிழ் துறை பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் பிற துறை பேராசிரியர்கள் உள்ளிட்ட திரளானோர் இவ்விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
செய்தியாளர் - ரூபன்

0 Comments