திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், மனைவி வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், மகள் கீர்த்தனா விஜயகுமார் ஆதரவுடன் தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சாரம் மற்றும் கலைகளை பரப்பவும், பாதுகாக்கவும், சமூக மேம்பாட்டிற்காக அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகம், பசிப்பிணி போக்க அன்றாடம் அன்னதானம், உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிணங்களை உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்யும் மனிதநேயப் பணியில் ஈடுபட்டு வருகிறார். சிறப்பு விருந்தினர் மேனாள் மாவட்ட நீதிபதி விடியல் குகன் @ கே.கருணாநிதி புழங்கு பொருட்கள் காட்சியகத்தை பார்வையிட்டு அரிக்கேன் விளக்கு குறித்து கேட்டறிந்தார்.

அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் அரிக்கேன் விளக்கு குறித்து பேசுகையில், முன்னோர்கள் பயன் படுத்திய பழமையான விளக்குகள் தற்போது பார்ப்பதற்கு அதிசயமாகவும், நினைவாகவும் உள்ளன. ஆதியில் மனிதர்கள்  ஒளிவழங்கிய சூரியனை கடவுளாக வழிபட்டனர்.   முழுநிலவு நாளை தவிர மற்றநாட்கள் இருளைத்தான் வழங்கின. வெயிலும், காற்றும் சேர்ந்து அடித்த நாட்களில் சில மூங்கில்கள் தங்களுக்குள் உரசி தீப்பற்றி எரியதொடங்கின. தொலைவில் நின்று பார்த்த போது, தீப்பற்றிய காடுகள், இரவு தொடங்கியும் அணையாமல் எரிந்ததும். அதன் வெளிச்சத்தில் காட்சிகள் தெரிந்ததும்  அறிவை பயன்படுத்தி, மரங்களுடன் மரங்கள் செயற்கையாக உரசச்செய்து 'தீ' உருவாக்கினான். பின்பு, எரிந்த மரத்துண்டுகளின் மீது சிறு குச்சிகளை வைத்து பலநாட்கள் எரிய வைத்தான்.  இருளை விலக்கியதால்  விளக்கு என பெயர் வந்தது.  இயற்கை கற்றுத்தந்த அறிவால், மிருகங்களின் கொழுப்புகளை பாறைகுழிகளில் தேக்கிவைத்து சில மணிநேரம் எரியும் விளக்குகளை தயாரித்தான். அதன்பின்பு, பாறைகளை துண்டுகளாக்கி அதில் விளக்குகள் உருவாக்கினான். அடுத்து பல நுாற்றாண்டுகள் கடந்து தேங்காய், கொட்டமுத்து, கடலைமுத்து ஆகியவற்றிலிருந்து எண்ணை உற்பத்தி செய்தனர். கல், களிமண்ணால் செய்த விளக்குகளில்  எண்ணையை ஊற்றி, எரிய வைத்தனர். பின் பலவகையான விளக்குகள் செய்யப்பட்டன. கல், இரும்பு, பித்தளை, செம்பு, ஆகியவற்றை பயன்படுத்தி புதிய, புதிய விளக்குகள் செய்தனர். கற்கள் அதிக வெப்பத்தை தாங்க கூடியதாக இருந்ததால், தொடக்ககாலத்தில் கற்களால் விளக்குகள் செய்தனர். குத்துவிளக்கு, கைவிளக்கு, நிரந்தமாக ஒரே இடத்தில் அமைந்த விளக்குகள் கற்களால் உருவாக்கப்பட்டன. எடுத்துச்செல்வது சிரமம், எடை அதிகம் போன்ற காரணங்களாலும், உலோகங்களில் செய்த விளக்குகள் வருகையாலும், மண்ணெண்ணை விளக்குகள் அறிமுகத்தாலும் இந்த விளக்குகள் பயன்படுத்துவது குறைந்தது.

சீமைஎண்ணெய் எண்ணை வித்துக்களை தொடர்ந்து, 18ம் நுாற்றாண்டுகளில் நமது நாட்டில் அறிமுகமான, 'சீமை எண்ணை', அதாவது மண் எண்ணை (கெரசின்) விளக்குகள் எளிதான பயன்பாட்டினால் மக்களிடம்  வரவேற்பை பெற்றது. அரசு அலுவலகங்கள் முதல் தெருவிளக்குகள் வரை இவை பயன்படுத்தப்பட்டன. இந்த எண்ணையை பயன்படுத்தி பலவகை விளக்குகள் தயாரிக்கப்பட்டன.

சுவரொட்டி விளக்கு, சிம்னி விளக்கு என குறிப்பிடுவதை போல அமைப்பில் இருக்கும். சுவற்றில் ஆணி அல்லது தாங்கி அமைக்கப்பட்டிருக்கும். இந்த தாங்கியில் இந்த விளக்கை பொருத்தி விடுவார்கள். மண்எண்ணை பயன்படுத்தி பல மணி நேரம் எரியும் திறன் கொண்டது. இதை சுவரொட்டி விளக்கு என அழைத்தனர். 50 ஆண்டுகளுக்கு முன் பயன்பாட்டில் இருந்தது.சிறிய குடுவையில் மண்எண்ணை ஊற்றி, அதில் திரியிட்டு, அதை தகரம் மற்றும் கண்ணாடியால் செய்யப்பட்ட சதுரமான கூண்டுக்குள் வைத்து விடுவார்கள். இந்த கூண்டு திறந்து மூடும் மாடலில் செய்யப்பட்டு, இதன் மேற்பகுதியில் புகைவெளியேற புகைபோக்கியும் அமைக்கப்பட்டிருக்கும். புயல் காற்று அடித்தால் கூட அணையாமல் ஒளி வழங்குவது இந்த கூண்டு விளக்கின் சிறப்பாகும். கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன் பயன்பாட்டுக்கு வந்தது.

சிம்னி சிறிய குடுவை மேற்பகுதியில் திரி பாதுகாப்பான கண்ணாடி இது சிம்னியின் அமைப்பு. ஒரு காலகட்டத்தில் இந்த சிம்னி இல்லாத வீடுகளே இல்லை எனும் அளவில் சிம்னி புகழ்பெற்றது. திரியை துாண்டி வெளிச்சம் அதிகரிக்கவும், குறைக்கவும் இதில் சிறிய திருகி அமைக்கப்பட்டிருக்கும்.

இதர விளக்குகள் லாந்தர், அரிக்கேன் ஆகியவை மண்எண்ணை பயன்பாட்டு விளக்குகளுக்கு புதிய வடிவம் கொடுத்து உருவாக்கப்பட்டன. இந்த விளக்குகள் நீண்ட நேரம் எரிந்து வெளிச்சம் வழங்கக்கூடியதோடு, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு எடுத்து செல்ல எளிமையானது. பலர் விரும்பி பயன்படுத்தினர். இதோடு,  'பெட்ரோமெக்ஸ்' ஒளி வெள்ளத்தை வழங்கி, நீண்ட நாள் உலா வந்தது.

 இரவு  நேரங்களில் செல்பவர்கள் கூண்டு விளக்கு, அரிக்கேன், லாந்தர், பெட்ரோமெக்ஸ் விளக்குகளை எடுத்துச்செல்வது வழக்கமானது. மாட்டுவண்டிகளில் அரிக்கேன் விளக்கை கட்டி தொங்கவிட்டு அதன் வெளிச்சத்தில் பயணம் செய்தனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த விளக்குகள் பயன்பாடு அதிகமாக இருந்தது.இதற்குப்பின் 'டார்ச்லைட்' கள் வருகையால் மறைய தொடங்கி, தற்போது மொபைல் போன்களில் கூட அதிக வெளிச்சம் வழங்கும் லைட்டுகள் உள்ளதால் இந்த விளக்குகள் பயன்பாட்டிலிருந்து விலக்கப்பட்டன என்றார்.