அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், ராஜ்யசபா எம்பியுமான கிறிஸ்டோபர் திலக், திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்:--
இரண்டு நாட்களில் ஒரு தெளிவு ஏற்படும் என்ற நம்பிக்கையில் சென்னை செல்கிறேன். அடுத்த 10 நாட்களுக்குள் புதிய அரசு பொறுப்பேற்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். தமிழக வெற்றி கழகம் 35% வாக்குகள், திமுக 30% வாக்குகள் பெற்றுள்ளன. இது பாஜகவுக்கு எதிரான நிலையை காட்டுகிறது. பாஜக தமிழகத்தில் காலூன்ற கூடாது என்ற நோக்கில் வாக்களிக்கப்பட்டது என்பதனை காட்டுகிறது. மதச்சார்பின்மையை மையப்படுத்தி இந்த ஆட்சி அமைக்கப்பட்டது. இது உடைய கூடாது என்ற நோக்கில்தான் காங்கிரஸ் கட்சியும் முடிவு எடுத்துள்ளது.
விஜயும் மதச்சார்பின்மைக்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் பல விஷயங்களை உரத்த குரலில் பேச வேண்டும்.
காங்கிரஸுக்கு 5 எம்எல்ஏக்கள் இருந்தாலும், தமிழகத்தின் நிலை மற்றும் மதச்சார்பின்மையை மையப்படுத்தி இந்த முடிவு எடுக்க வேண்டும் என்ற நிலையில் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கூட்டணி வாக்குகள் மூலமாகத்தான் ஏற்கனவே திமுகவின் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றார்கள். எனவே அதனை அவர்கள் ராஜினாமா செய்வார்களா? அதுபோல உதயநிதி ஸ்டாலினும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி ஆதரவுடன் தான் வெற்றி பெற்றார். என்பதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வாரா?.
பாஜகவின் அடுத்த கட்ட நகர்வை முடக்கும் விதமாகத்தான் இந்த முடிவை காங்கிரஸ் எடுத்துள்ளது. தேர்தலின் போது பல தலைவர்கள் பஞ்ச் டயலாக் கூறிய நிலையில் அதற்கு தற்போது விளக்கம் அளிக்க முடியாது. விஜய் தனது வாக்குறுதி எவ்வாறு நிறைவேற்றப் போகிறார் என்பதைத்தான் பார்க்க வேண்டும்.
மற்ற கட்சிகள் அனைத்தும் பெருமளவில் பணம் செலவழித்துதான் போட்டியிட்டார்கள். ஆனால் விஜய் கட்சியில் உள்ளவர்கள் பெரும் செலவு செய்து போட்டியிட வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை. ஒரு சிலர் தவிர விசில் சின்னத்தில் யார் வேட்பாளர் என்பதுகூட தெரியவில்லை. பிரச்சாரம் சரியாக செய்யக்கூடவில்லை. ஆனால் வெற்றி பெற்றுவிட்டனர்.
இதனால் மிகப்பெரிய செலவு செய்து அந்த பணத்தை எடுக்க வேண்டிய எண்ணம் அவர்களுக்கு இல்லை. எனவே இது ஊழலுக்கு வழிவகுக்காது.
திமுக, அதிமுக கூட்டணி அமைப்பது என்பது, பாஜகவுடன் நேரடி தொடர்பில் உள்ள ஒரு கட்சியுடன் திமுக கூட்டணி செல்வது என்பது சரியாக வருமா என்பதை நீங்கள் யோசிக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பும் சரி, தேர்தலுக்குப் பின்பும் சரி கூட்டணியில் தலைமை வகித்த திமுக, ஒரு பெரியண்ணன் மனப்பாங்குடன் நடந்து கொள்ளவில்லை.
தமிழகத்தில் பாஜக காலூன்றி விடக்கூடாது என்பதற்காகதான் ஸ்டாலின் கடந்த 5 ஆண்டுகளாக அரசியல் செய்தார். அதே போன்றுதான் காங்கிரசும் தற்போது இந்த முடிவு எடுத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்குள் ஏதேனும் குழப்பங்களை ஏற்படுத்தலாமா என பாஜக முயற்சித்து வரும் நிலையில், அதனை முறியடிக்கும் விதமாகத்தான் காங்கிரஸ் இந்த முடிவு எடுத்துள்ளது.
பெரும்பான்மை இல்லாவிட்டால் 6 மாதம் இதுபோன்று இழுத்துக் கொண்டு செல்லும். அதற்கு வாய்ப்பளிக்ககூடாது.
ஒரு நடிகருக்காக ரசிகர்கள் பட்டாளம் மற்றும் அரசுக்கு எதிரான மக்கள் நிலைப்பாடு போன்றவையும் தமிழக வெற்றி கழக வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. ஆட்சியில் இருந்தவர்கள் தான் தேர்தலுக்கு அதிக செலவழித்து உள்ளனர். இந்த சூழலில் தானும் ஒரு சீன் கிரியேட் பண்ண வேண்டும் என்பதற்காக தான் ரஜினியும் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார் என்றார்.

0 Comments