BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** திருச்சி தேசிய கல்லூரி 103 வது ஆண்டு விழா - தெலுங்கானா கவர்னர் தமிழிசை பங்கேற்பு

திருச்சி தேசிய கல்லூரி 103 வது ஆண்டு விழா - தெலுங்கானா கவர்னர் தமிழிசை பங்கேற்பு

 திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது தேசியக்கல்லூரி. 1886 ஆம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாக தொடங்கி, 1919 ஆம் ஆண்டு தேசியக்கல்லூரியாக உருவெடுத்தது. டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்படும் இந்த கல்லூரி தற்போது வரை பொன் விழா, வைர விழா, முத்து விழாக்களை கொண்டாடி, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 10-ந்தேதி நூற்றாண்டு விழாவையும் கோலாகலமாக கொண்டாடி பெருமை கொண்டுள்ளது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு கலந்துகொண்டு கல்லூரியின் பெருமைகளை எடுத்துரைத்தார்.


சுமார் 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுடன் கல்வி சேவையாற்றி வரும் திருச்சி தேசியக்கல்லூரி தேசிய கல்வித்தர மதிப்பீட்டு குழுவினரால் (நாக் கமிட்டி) ஏ பிளஸ் அந்தஸ்தை பெற்றுள்ளதோடு, பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள கல்லூரியாகவும் திகழ்ந்து வருகிறது. திருச்சி மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த ஏழை, எளிய மற்றும் அடித்தட்டு மாணவ, மாணவிகளின் கல்வி தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இக்கல்லூரி செயல்பட்டு வருகிறது.


இந்தநிலையில் தேசியக்கல்லூரியின் 103-வது ஆண்டு விழா வருகிற 24 -ந்தேதி  நடைபெற உள்ளது. அன்று காலை 9 மணிக்கு கல்லூரி வளாகத்தில் உள்ள பிரமாண்ட அரங்கில் விழா தொடங்குகிறது. விழாவில் கல்லூரி தாளாளர் கே.ரகுநாதன் வரவேற்புரையாற்றி சிறப்பு விருந்தினரை கவுரவிக்கிறார். கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.சுந்தரராமன் கல்லூரி ஆண்டறிக்கை வாசிக்கிறார்.

விழாவில் தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி தலைமை உரையாற்றுகிறார். விழா நிறைவில் திருச்சி தேசியக்கல்லூரி ஐ.கியூ.ஏ.சி. ஒருங்கிணைப்பாளரும், இணை பேராசிரியருமான பெனட் நன்றி கூறுகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை தேசியக்கல்லூரி நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

முன்னதாக விழாவில் பங்கேற்பதற்காக கல்லூரி ஆண்டு விழா அழைப்பிதழை, கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.சுந்தரராமன் புதுச்சேரியில் அம்மாநில துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்து வழங்கினார்.


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments