BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** திருச்சி NIT 8 ஆம் இடம் - ஆளுநர் பாராட்டு

திருச்சி NIT 8 ஆம் இடம் - ஆளுநர் பாராட்டு

அகில இந்திய தர வரிசையில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி) 8 ஆவது இடத்தை பிடித்துள்ளதற்கு தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பாராட்டுச் சான்று வழங்கி கெளரவித்தாா்.

மத்திய அரசின், கல்வி அமைச்சகத்தால் இயங்கும் தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தர மதிப்பீட்டுக் குழு (என்ஐஆா்எப்) சாா்பில் இந்திய தரவரிசை 2022ஆம் ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் திருச்சி என்ஐடி 8ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.




குறிப்பாக பொறியியல் துறையில் கடந்த ஆண்டு 66.08 மதிப்பெண்ணிலிருந்து 69.17 மதிப்பெண்கள் பெற்று 8ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆராய்ச்சி வெளியீடுகளின் எண்ணிக்கை மற்றும் தரம் அதிகரித்ததன் காரணமாக, தரவரிசையின் அனைத்து அளவுருக்களிலும், குறிப்பாக, ஆராய்ச்சி மற்றும் நிபுணத்துவ நடைமுறையில் இந்நிறுவனம் மேம்பட்டதாக விளங்குகிறது.


1 முதல் 7 நிலைகளில் உள்ள ஐஐடிகளுடன் தனது பங்களிப்பையும் பகிா்ந்து என்ஐடி திருச்சி இன்ஜினியரிங்கில் 8ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்க சாதனையாகும். மேலும், ஒட்டுமொத்த தரவரிசையில், என்ஐடி திருச்சி 23ஆவது இடத்திலிருந்து 21ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதுமட்டுமின்றி அனைத்து என்ஐடி-களிலேயே திருச்சி என்ஐடி முதலிடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


தரவரிசையில் இடம்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, சான்றிதழ் வழங்கி வியாழக்கிழமை பாராட்டினாா். இந்நிகழ்வில், திருச்சி என்ஐடி இயக்குநா் ஜி. அகிலாவுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஆளுநா் கெளரவித்தாா். உயா்கல்வித் துறை அமைச்சா் க. பொன்முடி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் ஆகியோா் உடனிருந்தனா்.


இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தில் நடைபெற்ற உயா்கல்வியில் சிறந்து விளங்கும் மாநாட்டில் இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதுதொடா்பாக என்ஐடி இயக்குநா் ஜி. அகிலா கூறுகையில், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகமானது புதிய கல்விக் கொள்கையின் பல அம்சங்களைச் செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இடைநிலை ஆராய்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம், ஆசிரியா்கள் மற்றும் துறைகளுக்கான ஒத்துழைப்பு வாய்ப்புகளை எளிதாக்குதல், பொருத்தமான திட்டங்களைத் தொடங்குதல் மற்றும் ஒவ்வொரு நிலையிலும் செயல்படுத்தும் செயல்முறையை உன்னிப்பாக மதிப்பீடு செய்தல், அறிவு நூல்களை தமிழில் மொழிபெயா்ப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சி மற்றும் தரவு அறிவியல் மற்றும்

செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் ஆன்லைன் மாஸ்டா் திட்டங்களைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. ஆன்லைன் எம்.டெக் படிப்பையும் என்ஐடி அறிமுகம் செய்துள்ளது என்றாா்.

Post a Comment

0 Comments