BREAKING NEWS *** "மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை" உச்சநீதிமன்றத்தில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் *** அறுவை சிகிச்சையின்றி பெருந்தமனி வால்வு மாற்று செயல்முறை - திருச்சி காவேரி மருத்துவமனை சாதனை

அறுவை சிகிச்சையின்றி பெருந்தமனி வால்வு மாற்று செயல்முறை - திருச்சி காவேரி மருத்துவமனை சாதனை

திருச்சி காவேரி மருத்துவமனையில் திறந்தநிலை இதய அறுவைசிகிச்சைக்கு ஒரு மாற்றாக, மிகக்குறைவான ஊடுருவல் செயல்முறையான டிரான்ஸ்கதீட்டர் பெருநாடி வால்வு பதிய (TAVI) செயல்முறை பயன்படுத்தப்பட்டது .காலின் இரத்தநாளங்களில் சிறுதுளைகள் வழியாக உட்செலுத்தப்படும் குழாய்களைப் பயன்படுத்தி ஒரு செயற்கை வால்வை பதியம் செய்வது இச்செயல்முறையில் இடம்பெறுகிறது.

திருச்சி காவேரி மருத்துவமனையில் மூத்த குடிமக்கள் இருவருக்கு டிரான்ஸ்கதீட்டர் பெருந்தமனி வால்வு பதிய செயல்முறையைப் (TAVI) பயன்படுத்தி அறுவைசிகிச்சை இல்லாமல் பெருந்தமனி வால்வு மாற்று சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டிருப்பதை இன்று மருத்துவர்கள் அறிவித்தனர். 

 

60 மற்றும் 70 வயதைக் கடந்த மூத்த குடிமக்கள், சுவாசிப்பதில் சிரமப் பிரச்சனையோடு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளனர். கூடுதலாக இவர்களுக்கு இதய செயல்பாடு தொடர்பான பாதிப்புகளும் இருந்தன. 

முதல் நபருக்கு அவரது இதயத்திற்கு செல்லும் இரத்தநாளங்களில் இருந்த அடைப்புகளுக்காக பைபாஸ் அறுவைசிகிச்சை முன்பு செய்யப்பட்டிருந்தது.  சமீபத்தில் இவருக்கு சுவாசிப்பதில் சிரமப்பிரச்சனை உருவானதோடு அவரால் நேராகப் படுக்க இயலவில்லை.  குறுகியிருக்கும் இதயச்சுவர் மற்றும் பெருந்தமனி வால்வில் கசிவு என இரு பிரச்சனைகளும் அவருக்கு இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.


ஏற்கனவே அவருக்கு திறந்தநிலை அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருந்த காரணத்தாலும் மற்றும் மீண்டும் திறந்தநிலை அறுவைசிகிச்சையை செய்வது உயிருக்கு ஆபத்தானதாக இருக்கலாம் என்ற இடரினாலும் TAVI மருத்துவ செயல்முறை உகந்தது என அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.  அவருக்கு இருந்த பிரச்சனைக்குத் தீர்வுகாண பலூன் மூலம் விரிவாக்கக்கூடிய ஒரு TAVI வால்வை இம்மருத்துவமனையின் சிறப்பு இருதயவில் நிபுணரான டாக்டர். சூரஜ் நரசிம்மன் தலைமையிலான மருத்துவக் குழு வெற்றிகரமாக பொருத்தியது.   




இரண்டாவது நபருக்கு தீவிர சுவாசப் பிரச்சனை இருந்தது.  100 மீட்டர்கள் தூரம் வரை கூட அவரால் நடக்க இயலவில்லை.  பெருந்தமனி வால்வில் கால்சியம் படிமங்கள் சேர்ந்திருப்பதன் காரணமாக நிகழ்கின்ற கடுமையான பெருந்தமனி குழாய் சுருக்கம் என அழைக்கப்படும் பாதிப்பு இருப்பது விரைவில் அவருக்கு உறுதி செய்யப்பட்டது.  இப்பிரச்சனையின் காரணமாக, பெருந்தமனி வால்வு திறப்பது பாதிக்கப்படும்.  இதனால், உடலின் பிற பகுதிகளுக்கு குறைவான இரத்தமே செல்லும்.  இப்பாதிப்பு நிலையின் காரணமாக அவரது இதயத்தின் பம்ப்பிங் செயல்பாடு 15% ஆக குறைந்திருந்தது.  அத்துடன், அவரது சிறுநீரக செயல்திறனும் குறைந்திருந்தது.  திறந்தநிலை இதய அறுவைசிகிச்சை செய்யப்படுமானால், உயிரிழப்பிற்கு அதிக இடர்வாய்ப்பு அவருக்கு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது.  



விரிவான கலந்தாலோசனைக்குப் பிறகு TAVI செயல்முறையை இவருக்கு மேற்கொள்ள மருத்துவ நிபுணர்களின் குழு முடிவு செய்தது.  காலில் மிகச்சிறிய துளையை ஏற்படுத்தி, அதன்வழியாக சுயவிரிவாக்கம் செய்துகொள்ளக்கூடிய TAVI வால்வை மருத்துவர்கள் குழு அவருக்கு வெற்றிகரமாகப் பொருத்தியது.   

காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குனர் மற்றும்  இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் T. செந்தில்குமார் வெற்றிகரமான இச்சிகிச்சை குறித்து கூறியதாவது: “பெருந்தமனி என்பது, ஆக்சிஜன் நிறைந்த இரத்தத்தை முழு உடலுக்கும் எடுத்துச் செல்கின்ற மிகப்பெரிய இரத்த நாளமாகும். இடது வெண்ட்ரிக்கிள் என்பது இதயத்தின் உந்தி அறையாகும். பெருந்தமனி வால்வு என்பது, பெருந்தமனிக்கும் இதயத்தின் இடது கீழறைக்கும் இடையிலுள்ள வால்வாகும். இந்த உறுப்புகளில் ஏதேனும் பிரச்சனை இருக்குமானால், அது மிகவும் ஆபத்துகரமானதாகும் மற்றும் உடனடியாக மருத்துவ இடையீட்டு சிகிச்சை இதற்குத் தேவைப்படும்.  இதற்கு முன்பு வரை இத்தகைய பாதிப்பு நிலைகள் அறுவைசிகிச்சை மூலம் சரிசெய்யப்படும் அல்லது வால்வு மாற்றப்படும்.


இந்த அறுவைசிகிச்சையில் உயிரிழப்பிற்கு பெரிய அளவிலான இடர்வாய்ப்பும் இருக்கும்.  நீண்டநாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்கும் அவசியத்தோடு மார்பு மீது பெரிய அளவில் வெளியில் தெரியக்கூடிய தழும்பும் இதனால் ஏற்படும்.   சிகிச்சைக்குப் பிறகு மீண்டு இயல்புநிலைக்கு வருவதற்கு இந்நபர்களுக்கு நீண்டகாலம் தேவைப்படும்.  அதன்பிறகே வழக்கமான நடவடிக்கைகளை இவர்களால் மேற்கொள்ள முடியும்.  ஆனால், நவீன கண்டுபிடிப்புகள், டிரான்ஸ்கதீட்டர் பெருந்தமனி வால்வு பதியம் (TAVI) போன்ற புதிய விருப்பத்தேர்வுகளை சாத்தியமாக்கியிருக்கின்றன.


 அறுவைசிகிச்சை இல்லாமலேயே ஒரு வால்வை இதன்மூலம் பொருத்த முடியும்.  காலின் இரத்தநாளங்களில் சிறிய துளைகளிட்டு, அவற்றின் வழியாக உட்செலுத்தப்படும் குழாய்களைப் பயன்படுத்தி ஒரு செயற்கை வால்வினை பொருத்துவது இம்மருத்துவ செயல்முறையில் இடம்பெறுகிறது.  65 வயதிற்கு மேற்பட்ட வயதான நபர்களுக்கு மற்றும் பிற உறுப்பு அமைப்புகளில் பிரச்சனைகள் இருக்கின்ற அல்லது அறுவைசிகிச்சைக்கு அதிக அளவு இடர்வாய்ப்பு இருக்கின்ற நபர்களுக்கு இந்த வழிமுறை வழக்கமாக அறிவுறுத்தப்படுகிறது.  


எவ்வித வலியும் இல்லாமல் 45 நிமிடங்களுக்குள் விழித்திருக்கும் நிலையிலுள்ள ஒரு நோயாளிக்கு TAVI மருத்துவ செயல்முறையை மேற்கொள்ள முடியும் என்பது இதன் தனித்துவ அம்சமாகும்.  இச்செயல்முறை நிறைவடைந்ததிலிருந்து 6 மணி நேரங்களுக்குப் பிறகு இந்நோயாளியால் எழுந்து நடமாட இயலும்; வழக்கமான செயல்பாடுகளை செய்வதற்கான திறனைப் பெற்றிருக்கும் நிலையில், 48 மணி நேரங்களுக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு சென்று இயல்பான செயல்களை இவர்களால் செய்ய முடியும்.” 





“திறந்தநிலை அறுவைசிகிச்சைகளில் அதிகமான இடர்வாய்ப்பைக் கொண்டிருந்த இந்த முதியவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கு மிகத் துல்லியமான நோயறிதலையும் மற்றும் சரியான சிகிச்சை முறையையும் அடையாளம் கண்டு வெற்றிகரமாக இதனை நிகழ்த்தியிருக்கும், இடையீட்டு இதயவியல் சிகிச்சை நிபுணரான டாக்டர். சூரஜ் நரசிம்மன் மற்றும் அவரது குழுவினரை நான் பாராட்டி மகிழ்கிறேன்.” என்று டாக்டர். T. செந்தில் குமார் மேலும் கூறினார். 

இந்த மருத்துவ செயல்முறைக்குப் பிறகு பாதிப்பு அறிகுறிகளும், வேறு சிக்கல்களும் ஏதும் இல்லாத நிலையில், சிறப்பான சிகிச்சை விளைவுகளுடன் இந்த மூத்த குடிமக்களும் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  இப்போது இவர்களால் இயல்பாக நடக்க முடிகிறது மற்றும் வழக்கமான செயல்பாடுகளை நன்றாகவே அவர்களால் செய்ய இயல்கிறது என கூறினார்.

Post a Comment

0 Comments