BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** திருச்சி தேசிய கல்லூரியில் தமிழ்ப்பண்பாட்டு திருவிழா

திருச்சி தேசிய கல்லூரியில் தமிழ்ப்பண்பாட்டு திருவிழா

 திருச்சிராப்பள்ளி தேசியக்கல்லூரியின் தமிழ்த்துறையும் உடற்கல்வித் துறையும் இணைந்து நடத்திய 'தமிழ்ப்பண்பாட்டுத் திருவிழா' கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவிற்குக் கல்லூரி முதல்வர் முனைவர் கி. குமார் தலைமை தாங்கினார்.


அப்பொழுது, அவர் உலகப் பண்பாட்டிற்கும் இந்தியப் பண்பாட்டிற்கும் தமிழகப் பண்பாடு ஆற்றியுள்ள பங்களிப்புக் குறித்து எடுத்துரைத்தார். கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச. ஈஸ்வரன், இந்தேசியக்கல்லூரி தொடங்கப் பெற்றதன் நோக்கமே மாணவ மணிகளுக்குத் தேசப்பற்றையும் பண்பாட்டையும் போதிப்பதுதான் என்றார்...

கவிஞர் நந்தலாலா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவர் பேசும்போது, 'கலை, பண்பாட்டினைக் காப்பாற்றாமல், வெறும் மொழியைக் காப்பாற்ற முடியாது' என்றார். மேலும், திருச்சிராப்பள்ளிக்கு மகாத்மா காந்தி ஆறு முறை வருகை புரிந்தார். அப்பொழுது அவர் சந்தித்துக் கலந்துரையாடியது தேசியக் கல்லூரி மாணவர்களுடன்தான் என்றார். 


காந்தியடிகளின் தாக்கம் மார்டின் லூதர் கிங் அவர்களிடம் அழுத்தமாக உண்டு. அதுவே நம் பண்பாட்டின் சிறப்பிற்கு அடையாளம் என்றார். தமிழர்கள் பண்பாட்டில் மட்டுமல்ல அறம், அறிவியல் துறைகளிலும் சிறப்பான பங்களிப்பினைச் செய்துள்ளனர் எனக் குறிப்பிட்டார்.முன்னதாகக் கல்லூரியின் துணைமுதல்வரும் உடற்கல்வித்துறை இயக்குநருமான முனைவர் து. பிரசன்ன பாலாஜி (நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்) தமிழின் தனித்தன்மைகளைக்


கூறி அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வின் மற்றொரு ஒருங்கிணைப்பாளரான உதவிப்பேராசிரியர் முனைவர் சா. நீலகண்டன் சிறப்பான முறையில் நிகழ்ச்சியைத் தொகுத்து‌ வழங்கி நன்றி நவின்றார்.இந்நிகழ்வில் பல துறைப் பேராசிரியர்களும் மாணவர்களும் பெருந்திரளாகப் பங்கேற்று பயன்பெற்றனர்.

நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments