BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** ஜூலை 9 ஆம் தேதி கோவை மத்திய சிறை முற்றுகை -‌ மமக அறிவிப்பு

ஜூலை 9 ஆம் தேதி கோவை மத்திய சிறை முற்றுகை -‌ மமக அறிவிப்பு

 மனிதநேய மக்கள் கட்சியின்  தலைமை நிர்வாக குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவரும் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா  தலைமையில் அந்த கூட்டமானது நடைபெற்றது கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா,


20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு சிறைச்சாலைகளில் உள்ள முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.தமிழ்நாடு சட்டபேரவையில் பல முறை இது குறித்து பேசி உள்ளோம்.

37 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை குறித்து தமிழ்நாடு அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.


கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது தமிழகத்தின் கவனத்தை ஈர்த்த வழக்குகளில் பலர் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள்.

அதே போல தற்போதைய அரசும் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலையில் கவனம் செலுத்தி இது குறித்து அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் ஜீலை 9 ஆம் தேதி கோவை மத்திய சிறைச்சாலையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளோம்.


திமுக அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் அவர்கள் அளித்த பல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்கள். கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்.


நேற்று தமிழ்நாடு வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா  பாஜகவினரை உற்சாக மூட்டவே தமிழ்நாட்டில் 25 எம்பிக்கள் வெற்றி பெறுவார்கள் என பேசி உள்ளார். ஒரு படி மேலே போய் அவர் தமிழர் ஒருவர்தான் பிரதமர் ஆவார் என கூறி இருக்கிறார். தற்போதைய பிரதமர் மோடி மீது அவருக்கு என்ன கடுப்போ தெரியவில்லை. 


ஆனால் தமிழ்நாடு  பாசிசத்திற்கு ஆதரவாக மதச்சார்பின்மைக்கும் ஜனநாயகத்திற்கும் எதிராக அரசியலமைப்புச் சட்டத்தையே மதிக்காத பாஜகவையும் அவர்களுடன் கூட்டணி வைப்பவர்களையும் ஒன்று சேர்ந்து முறியடிக்கும்.

 பள்ளிகொண்டாவில் அமித்ஷா பேசிய பேச்சு பள்ளிக்கூட மாணவரை போன்ற கற்பனையான பேச்சு தான் என்ற அளவில் தான் எடுத்துக் கொள்ள முடியும்.


ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், நடிகர்களாக இருப்பதாலேயே அவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பதில்லை. ஆனால் அரசியலுக்கு வருவதற்கு முன்பு உள்ள நிலையும், அரசியலுக்கு வந்த பின்பு உள்ள எதார்த்த நிலையும் வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் இருந்து பிரிவார்கள் என கூறுவது நாடகம்தான். பாஜகவின் கடும் பிடியிலிருந்து, கொடும்பிடியிலிருந்து, அடிமை பிடியிலிருந்து அதிமுகவால் விலகி வர முடியாது.


நீட் தேர்வை கொண்டு வந்து தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்தது போல தற்பொழுது அகில இந்திய அளவில் மருத்துவத்திற்கு ஒரே கலந்தாய்வு வைப்பது என்பது தவறான முடிவு. இது மாணவர்களின் மருத்துவ கனவை பாதிக்கும். ஒன்றிய அரசின் இந்த முடிவை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என்றார்.

Post a Comment

0 Comments