BREAKING NEWS *** திருப்பதி லட்டு விவகாரத்தில் விசாரணையை தற்காலிகமாக நிறுத்திய ஆந்திர சிறப்பு விசாரணைக் குழு *** காந்தி மார்கெட்டை விட்டுச்செல்ல மாட்டோம் - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு ஆவேசம்

காந்தி மார்கெட்டை விட்டுச்செல்ல மாட்டோம் - தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு ஆவேசம்

திருச்சி பஞ்சப்பூரில் ரூ.343 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் அதனை சுற்றி பல்வேறு கட்டமைப்புகள் கொண்டுவரப்பட உள்ளது.


இந்த நிலையில்  பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பசுமை பூங்கா அருகில் 20.71 ஏக்கர் பரப்பளவில் ரூ.236 கோடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மார்க்கெட் வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையர் சரவணன் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு உள்பட 12 வியாபார சங்கங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர். 


கூட்டத்திற்கு பின்னர்  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்....


சமீபகாலமாக வணிகம் நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டிருக்கிறது. ஆன்லைன் வணிகம் அதிகரித்துள்ளது. இதனால் காந்தி மார்கெட்டில் வியாபார நேரம் குறைந்துள்ளது. மொத்த வியாபாரம் நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது. இதனால்  காலை 10 மணிக்கு மேல் வியாபாரம் நடப்பது கிடையாது. 5 மணிக்கு மேல் காய்கறி வண்டிகள் லோடு இறக்குவது இல்லை. இந்த மாதிரியான சூழ்நிலையில் காந்தி மார்க்கெட் இடமாற்றம் என்பது தேவையில்லாத ஒன்று. புராதன சின்னமான காந்தி மார்க்கெட்டில் இருக்கும் வசதிகளே எங்களுக்கு போதுமானது. காந்தி மார்க்கெட்டை சுற்றியுள்ள தள்ளுவண்டிகள் மற்றும் லாரி செட்டுகளால் மட்டுமே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 5 முதல் 6 மணிக்குள் காய்கறி வண்டிகள் வெளியேற்றப்படுகிறது. 7 முதல் 8 மணிக்குள் மொத்த வியாபாரமும், 11 மணிக்குள் சில்லறை வியாபாரமும் முடிந்து விடுகிறது. நாளுக்கு நாள் சுருங்கி வரும் இந்த வியாபாரம், நகர்ப்புற விரிவாக்கம் எனும் பெயரில் மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சிதிலமடைந்துவிடும். ஆகையால் புதிய மார்க்கெட் எங்களுக்கு தேவையில்லை என ஒருமித்த கருத்தாக மாவட்ட ஆட்சியரிடம் முன் வைத்துள்ளோம். மேலும் அமைச்சர் கே.என்.நேரு காந்தி மார்க்கெட்டை புனரமைத்து தருவதாக கூறியுள்ளார். அதேபோல திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், ₹.45 கோடி செலவில் காந்தி மார்க்கெட்டை புனரமைத்து தருவதாக சட்டமன்றத்தில் பேசியுள்ளார். அதனை நிறைவேற்றி கொடுத்தால் போதும். இந்த மார்க்கெட்டில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகள் பலனடைந்து வருகின்றனர். அதனால் புதிய மார்க்கெட் எங்களுக்கு தேவையில்லை. இதையும் மீறி வியாபாரிகளை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என நினைத்தால் வியாபாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து  உண்ணாவிரதம், போராட்டம் என அறவழியில்  போராடுவோம் என தெரிவித்தார்.

Post a Comment

0 Comments