திருச்சி தேசியக் கல்லூரியில் பணியாற்றி பணி நிறைவு பெற்ற மூத்த பேராசிரியர் இராதாகிருஷ்ணன் அவர்களின் நூற்றாண்டு இலக்கியப் பெருவிழா நடுவண் அரசின் சாகித்திய அகாதமி நிறுவனத்தோடு இணைந்து மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கல்லூரி செயலர் கா. ரகுநாதன் முன்னிலை வகித்து வாழ்த்துரை நல்கினார். கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர் முத்துராமகிருஷ்ணன் தலைமையேற்று தலைமை உரை வழங்கினார். பேராசிரியர் ராதாகிருஷ்ணன் அவர்களின் முதன்மை மாணவராகவும் தேசியக் கல்லூரியில் முதுகலை வகுப்புகள் தொடங்கப்பட்ட போது முதல் மாணவராகவும் பயின்ற வாணியம்பாடி கல்லூரியின் தமிழ் துறை பேராசிரியர் முனைவர் அப்துல் காதர் திருவாசகப் பார்வை என்ற பொருண்மையில் சிறப்புரை வழங்கினார்.
அல்லா என்று அழைக்கும் முன்பாகவே தன்னை அம்மா என்று அழைக்க வைத்த கல்லூரி தேசியக் கல்லூரி என்றும் தூசியைப் போல பாதம் பதித்தவர்களையும் மகரந்தமாக மாற்றிய பெருமை தேசிய கல்லூரிக்கு உண்டு என்றும் மேடையில் கற்றதை விற்பவர்களுக்கு மத்தியில் அசலை கொண்டு சேர்த்த ஆசிரியர் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் என்றும் புகழாரம் சூட்டினார். உலகம் அழிந்து உமையும் சிவனுள் அடங்கிய பிறகும் திருவாசகத்தின் வாயிலாக தமிழே நிலைத்திருக்கும் என்ற கருத்தினை அவையில் பதிய வைத்தார். தேசியக் கல்லூரி மாணவரும் திரைப்பட இயக்குனர் ஆகிய அகத்தியன் உள்ளங்கவர் கம்பன் என்ற தலைப்பில் உரையாற்றினார். கம்பராமாயணம் பாடல்களை 48 வருடங்கள் கடந்தும் மறக்காத நிலைக்கு மனதை நிலைப்படுத்திய பெருமை பேராசிரியர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு உண்டு என்றும் வெள்ளை தாமரை விட்டு மாணவர் உள்ள தாமரையில் குடியேறிய பேராசான் முனைவர் ராதாகிருஷ்ணன் என்பதையும் தம்முடைய சிறப்பு உரையில் பதிவு செய்தார். ஆற்றுப்படை இலக்கியம் என்ற பொறுமையில் சிறப்புரையாற்றிய திருவாரூர் சண்முகவடிவேல் அவர்கள் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் அவர்களோடு நெருங்கி பழகிய தம் உணர்வுகளை அவையோர்களின் மத்தியில் பகிர்ந்து கொண்டார். கம்ப பாரதி இலங்கை ஜெயராஜ் அவர்கள் உரையாற்றுகிற போது நேர்மையான சிந்தனை உடையவர் தன்னுடைய பேச்சால் தீய எண்ணங்களை திசை திருப்பி விரட்டியவர் ராதாகிருஷ்ணன் ஐயா என்பதையும் இந்தியாவை தாண்டி இலங்கை முதலான பல்வேறு நாடுகளில் தன்னுடைய சொற்பொழிவு திறமையை நிரூபித்து எண்ணற்ற இளைஞர்களை நல்வழிப்படுத்திய பேராசான் என்பதையும் எடுத்துரைத்தார். முன்னதாக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் காந்தி வரவேற்புரை வழங்கினார். நிறைவாக பேராசிரியர் ராதாகிருஷ்ணன் அவர்களின் புதல்வர் முனைவர் மாது நன்றியுரை நல்கினார். பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழாய்வுத்துறைத் தலைவரும் சாகித்திய அகாதெமியின் ஆலோசனைக் குழு உறுப்பினருமாகிய முனைவர் அலிபாவா வாழ்த்துரை வழங்கினார். தேசியக் கல்லூரியின் இயக்குனர் முனைவர் அன்பரசு தேர்வு நெறியாளர் புல முதன்மைர்கள் பல்வேறு துறைகளின் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட திரளானோர் விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
0 Comments