திருச்சியில் நடைபெற்ற பாஜக ஆன்மீகம் மற்றும் கோயில் மேம்பாட்டுப் பிரிவு கூட்டத்திற்குப் பிறகு, அந்தப் பிரிவின் மாநிலத் தலைவரான ஷெல்வி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் அப்போது:அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டும், தமிழக அரசு பல்வேறு காரணங்களைக் கூறி அதைத் தடுத்து வருவதாகக் குற்றம் சாட்டினார்.
இந்து சமய வழிபாட்டு முறைகளில் மட்டும் அரசு தொடர்ந்து தடைகளை விதிப்பது கண்டிக்கத்தக்கது.ஒரு மதத்தினரின் சந்தனகூடு விழாக்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து அனுமதி அளிக்கும் அரசு, முருகப் பெருமானின் கார்த்திகை தீப வழிபாட்டிற்கு மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இந்துக்களின் பண்டிகைகளை மட்டும் தமிழக அரசு புறக்கணிப்பதாகவும், ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட முதலமைச்சரின் துணைவியார் இந்த விஷயத்தில் உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.மேலும் முதலமைச்சர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளிலேயே பாதுகாப்பு மீறல்கள் நடப்பதாகவும், பாம்புகள் நடமாட்டம் போன்ற சம்பவங்கள் நிகழ்வது நிர்வாகத்தின் தோல்வியைக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
"இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளைத் தடுப்பது தமிழக அரசுக்கு நல்லதல்ல. முருகப்பெருமானின் கோபம் ஆட்சியாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்."என தெரிவித்தார்.மேலும் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற நீதிமன்றம் அனுமதி அளித்தும், தமிழக அரசு அதைச் சரியாகச் செயல்படுத்தவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார். மனுதாரர் ராம் ரவிக்குமார் மற்றும் ஒரு சிலரை மட்டும் தீபம் ஏற்ற அனுமதித்திருந்தால் இவ்வளவு பெரிய பிரச்சனைகள் உருவாகியிருக்காது என்று கூறினார்.
மேலும் முருக பக்தரான பூர்ணசந்திரன் இந்த விவகாரத்தில் உயிரிழந்ததற்குத் தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றார். சாராயச் சாவுகளுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு தரும் அரசு, ஆன்மீகத்திற்காக உயிர்நீத்தவருக்கு ஒன்றும் செய்யவில்லை என்று விமர்சித்தார்.
மேலும் இந்த விவகாரத்தில் தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனைத் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது தவறு என்றும், நீதிமன்றத் தீர்ப்பு பிடிக்கவில்லை என்றால் மேல்முறையீடு செய்யலாமே தவிர, நீதிபதியின் பின்னணியை விமர்சிக்கக் கூடாது என்றும் கூறினார்.
மேலும் அறுபடை வீடுகளிலும், குறிப்பாகத் திருப்பரங்குன்றத்தில் பௌர்ணமி தோறும் கிரிவலம் செல்வதற்குத் தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.



0 Comments