திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு சார்பில் முதலாம் உலகப் போர் நினைவுச் சின்னம் குறித்து அறிந்து கொள்ள, திருச்சி ஓர் பார்வை ஓர் பயணம் நிகழ்வினை திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு நிறுவனத் தலைவர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், பாலிமர் பணத்தாள்கள் சேகரிப்பாளர் இளம்வழுதி, வரலாற்று ஆசிரியர் அரிஸ்டோ வசந்தகுமார் உள்ளிட்டோர் மேற்கொண்டனர். முதலாம் உலகப்போர் நினைவுச்சின்னம் குறித்து திருச்சி வரலாற்று அலுவலர் குழு நிறுவனத் தலைவர் விஜயகுமார் பேசுகையில்,
திருச்சியின் மையப்பகுதியில் எப்போதும் பரபரப்பாக தற்போது இயங்கும் காந்தி மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள மணிக்கூண்டு என்ற நினைவுச்சின்னம். 1914 - 1919ஆம் ஆண்டிற்கு இடையே நடைபெற்ற முதலாம் உலகபோரில் திருச்சிராப்பள்ளியில் இருந்து சுமார் 302 வீரர்கள் பிரித்தானிய இந்திய ராணுவத்தின் சார்பாக முதலாம் உலகப் போரில் பங்கேற்றனர். இதில் 41 வீரர்கள் போரின் போது வீரமரணம் அடைந்தனர். மறைந்த வீரர்களின் நினைவாக, அரசாங்கம் ஒரு பெரிய கடிகாரத்தை திருச்சிராப்பள்ளியில் நினைவு சின்னமாக அமைத்தது.
கடிகார கோபுரம் என அனைவராலும் அறியப்பட்ட இந்த நினைவுச் சின்னம் சரியான பராமரிப்பு இல்லாமல் இருந்தது. அந்த நேரத்தில், பர்மிய அகதிகள் உட்பட சுமார் 25 வர்த்தகர்கள், நினைவு சின்னத்தை சுற்றியுள்ள இடங்களை ஆக்கிரமித்து அங்கு தங்களின் கடைகளை நிரந்தரமாக அமைத்துக் கொண்டார்கள்.
இதனால் நினைவு சின்னத்தை தடையின்றி வந்து பார்க்க இடையூறாக அமைந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு, 27 பிப்ரவரி 2013 அன்று திருச்சி மாநகராட்சி , முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பிற சேவை அமைப்புகளின் தொடர் கோரிக்கைகளை ஏற்று நினைவு சின்னத்தை சீரமைக்க முடிவு செய்தது.அங்கு ஆக்கிரமிப்பு செய்து இருந்த கடைகளின் உரிமத்தை ரத்து செய்தனர் மற்றும் நினைவுச் சின்னத்தை சுற்றி இருந்த கடைகள் இடிக்கப்பட்டு ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டன. இதனை தொடர்ந்து போர் நினைவு சின்னமாக இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்றார்.





0 Comments