திருச்சி தேசியக் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக உ.வே.சாமிநாதையர் தமிழ்ப் பேரவையின் சிறப்புச் சொற்பொழிவு தமிழ்த்துறையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் த.முத்துராமகிருஷ்ணன் தலைமையேற்றுத் தலைமையுரை வழங்கினார்.
கிராமப்புற பின் தங்கிய பின்னணியில் இருந்து வருகை தரும் அடித்தட்டு மாணவ மாணவிகளை தலைசிறந்த சாதனையாளர்களாக உருவாக்குவதில் தேசியக் கல்லூரியும் தமிழ்த்துறையும் தண்ணிகரற்று விளங்குவதை தம் தலைமையுரையில் பதிவு செய்தார். வரலாற்றுத் துறைப் பேராசிரியர் முனைவர் செல்வக்குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வரலாற்று நாவல்களில் வரலாற்றுச் செய்திகள் என்ற பொருண்மையில் சிறப்புரையாற்றினார். வரலாற்று நாவலாசிரியர்கள் தம்முடைய கற்பனையின் வாயிலாக நம் சமூகத்தில் உண்மையிலேயே நடைபெற்ற வரலாற்றுச் செய்திகளை அப்படியே உள்வாங்கிக் கொண்டு சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் வரலாற்று நாவல்களை உருவாக்கிய தன்மையை எடுத்துரைத்தார். கல்கி ரா .கிருஷ்ணமூர்த்தி, சாண்டில்யன் ஜெகசிற்பியன், அகிலன் ,நா. பார்த்தசாரதி போன்ற வரலாற்று நாவலாசிரியர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற சம்பவங்களை தம் படைப்புகளின் வாயிலாகக் கண்முன்னே காட்சிப்படுத்துவதற்குத் தமிழ் இலக்கியத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தியதை தம் சிறப்பு முறையில் எடுத்துரைத்தார். மேலும் வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற தலைசிறந்த மன்னர்களின் வாழ்வியலில் நடைபெற்ற சம்பவங்களை திரித்துக் கூறிய தன்மையையும் வரலாற்று நாவலாசிரியர்கள் திருத்தி எழுதிய தன்மையை தெளிவாக விளக்கினார். முன்னதாகத் தமிழ்த் துறைத்லைவர் முனைவர் சி. காந்தி வரவேற்புரை வழங்கினார். நிறைவாக தமிழ் பேரவைத் துணைத் தலைவர் முனைவர் இரா. பத்மா நன்றியுரை நல்கினார். பல்வேறு துறைகளின் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட திரளானோர் இவ்விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

0 Comments