மனிதநேய அனைத்து வர்த்தக நலசங்க தலைவர் கபீர் அகமது தலைமையிலான நிர்வாகிகள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மனிதநேய அனைத்து வர்த்தகர் நலச் சங்கத்தின் உறுப்பினர்கள் 100க்கும் மேற்பட்டோர், தரைக்கடை மற்றும் கையில் வைத்து NSB ரோடு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சாலையில் ஓர ஒதுக்கமாக பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்தவித இடையூறும் இன்றி தரைக் கடைகளை அமைத்து தங்களுடைய வாழ்வாதாரத்தை ஈட்டி வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் திருச்சி மாநகர வியாபார குழு வெண்டார் கமிட்டி மூலமாக NSB சாலையில் உள்ள தரைக்கடை வியாபாரிகள், தற்போது வியாபாரம் செய்யும் பகுதிகளில் இருந்து 20-1-2026 ஆம் தேதிக்குள் தரைகடைகளை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று வியாபார குழு கமிட்டியில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறினர். இந்நிலையில் அதற்கு முன்பதாகவே 11-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் இணைந்து எந்தவித முன்அறிவிப்பும் இல்லாமல் வியாபாரிகளின் உடைமைகளை குப்பை வண்டியில் அள்ளி வலுக்கட்டாயமாக அங்கு உள்ள தரைக்கடை அகற்றிவிட்டனர். NSB ரோடு தரைக்கடை வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் ஏற்கனவே பல வியாபாரிகள் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வாழ்ந்து வருகிறார்கள்.
அவர்களுக்கு எந்தவித முன்னேற்பாடும் செய்யவில்லை. அவர்களுக்கு மாற்று இடங்களும் ஒதுக்கவில்லை. ஆனால், இங்குள்ள வியாபாரிகளை அவசர கதியில் அகற்றிவிட்டதின் காரணமாக வியாபாரிகள் ஏறத்தாழ 20 நாட்களுக்கு மேலாக சோற்றுக்கு வழியில்லாமல் வருமானம் இன்றி செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர். எனவே, மாவட்ட ஆட்சியர் வியாபாரிகளுக்கு முறையான இடத்தை ஒதுக்க வேண்டும் என்றும், அதுவரை வியாபாரிகள் வியாபாரம் செய்து வந்த NSB ரோடு பகுதிகளில் ஓர ஒதுக்கமாக தரைக்கடைகளை நடத்துவதற்கு அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோன்று தெப்பக்குளத்தை சுற்றிலும் உள்ள தரைக்கடைகளை அகற்றி அங்கிருந்து தரைக் கடைகளை மாற்றி அமைத்துக் கொள்ள கூறி மாநகராட்சிக்கு சொந்தமான ஹோலி கிராஸ் காலேஜ் அருகில் இருக்கக் கூடிய பழைய மாநகராட்சி கிளை அலுவலகம் இயங்கி வந்த இடமான 21,860 சதுர அடியை கொடுக்கப்பட்டு அங்குள்ள வியாபாரிகள் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள்.
ஆனால், தற்போது NSB ரோடு வியாபாரிகளுக்கு கொடுக்கப்பட்ட இடம் பஸ் மற்றும் டூவீலர், கார் போன்ற வாகனங்கள் சென்று வரும் மெயின் ரோடு ஆக உள்ளது. ஆகவே, ஐயா மேலே தெப்பக்குளத்தை சுற்றிலும் உள்ள வியாபாரிகளுக்கு கொடுத்தது போன்று பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாத இடமான சிங்காரத்தோப்பு, பூம்புகார் அருகாமையில் உள்ள யானைக்குளம் என்று சொல்லக் கூடிய மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், NSB ரோட்டில் உள்ள வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கி தர வேண்டும். அதுவரை வியாபாரிகள் வியாபாரம் பார்த்து வந்த பகுதிகளில் கடை அமைத்துக் கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.இந்த மனு அளிக்கும் நிகழ்வில் மாவட்ட பொது செயலாளர் அஷ்ரப் அலி, மாவட்ட பொருளாளர் அன்சாரி, மாவட்ட துணை தலைவர் முகமது காசிம், துணை செயலாளர்கள் ஜெயகொடி, பேன்சி ரபீக், ஜுபைர், அப்துல்லா, சர்புதீன், இப்ராஹிம், மகளிர் அணி நிர்வாகிகள் உமா, செல்வி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நஜீர், இக்பால், நாசர், ஜமீர், யூசுப், பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.








0 Comments