கோவையில் வலிமை திரைப்படம் வெளியான திரையரங்கம் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்ற ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டு வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவையில் கடந்த 24ம் தேதி அஜித் நடித்த வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. கோவை 100 அடி சாலையில் உள்ள கங்கா திரையரங்கம் முன்பு ரசிகர்கள் கூடியிருந்த போது, மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில், இருசக்கர வாகனம் ஒன்று சேதமடைந்ததோடு, நவீன்குமார் என்பவருக்கும் காலில் காயம் ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, கோவை ரத்தினபுரியில் வசித்து வரும் பெயிண்டரான பாளையங்கோட்டையை சேர்ந்த லட்சுமணன் (22) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வலிமை திரைப்படத்திற்கான டிக்கெட்டுக்களை வாங்க சென்ற போது, இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த நவீன்குமார் என்பவர் 100 ரூபாய் பெருமானமுள்ள டிக்கெட்டுக்களை ஆயிரம் முதல் 1200 ரூபாய் வரை விலை வைத்து விற்பனை செய்துள்ளார் எனவும் இதனை தட்டிக்கேட்ட போது, நவீன்குமாரும் அவருடன் இருந்தவர்களும், லட்சுமணனை தாக்கியதாக தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லட்சுமணன், தனது நண்பர்களுடன் சேர்ந்து பீர்பாட்டிலில், பெட்ரோலை பிடித்து கர்சீப்பால் பெட்ரோல் குண்டு செய்து நவீன்குமார் உள்ளிட்டோர் நின்றிருந்த இடத்தின் மீது வீசியது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவரை கைது செய்துள்ள போலீசார், அவருடன் இருந்த மேலும் 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். பிளாக் டிக்கெட் விவகாரத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments