உக்ரைன் நாட்டில் சிக்கித்தவித்த கோவை மாணவர்கள் 10 பேர் இன்று விமானம் மூலம் சொந்த ஊர் திரும்பிய நிலையில் பெற்றோர் அவர்களை கண்ணீர் மல்க ஆரத்தழுவி வரவேற்றனர்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நீடித்து வருகிறது. இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் உக்ரைனில் இருந்து நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் நாடு திரும்புவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
மேலும், உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்புக்குச் சென்ற மாணவர்களில் கோவையைச் சேர்ந்தவர்கள் மட்டும் சுமார் 20க்கும் மேற்பட்டோர் இருப்பதாக அங்குள்ள மாணவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே உக்ரைனில் இருந்து விமானம் மூலமாக இந்தியா புறப்பட்ட கோவையைச் சேர்ந்த சாய் பிரியா, ஜோனியா ஜோஸ், தர்ஷன், ரபீக், ஷெரின், வெண்மதி மற்றும் ரமேஷ் உட்பட 10 மாணவர்கள், போலந்து வழியாக இன்று டெல்லி வந்தடைந்தனர். தொடர்ந்து அங்கிருந்து விமானம் மூலமாக கோவை வந்தடைந்தனர்.
போர் பதற்றம் உள்ள நாட்டில் தங்களது குழந்தைகளை விட்டுவிட்டு தவித்த பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை சொந்த ஊரில் பார்த்ததும் கண்ணீர் மல்க கட்டியணைத்தனர். இந்த காட்சி காண்போர் கண்களில் கண்ணீர் வரவழைக்கும் வகையில் இருந்தது.
0 Comments