BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் 21 வது ஆண்டு பட்டமளிப்பு விழா - 369 மாணவர்கள் பட்டங்கள் பெற்றனர்

திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் 21 வது ஆண்டு பட்டமளிப்பு விழா - 369 மாணவர்கள் பட்டங்கள் பெற்றனர்

திருச்சி எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் 21 வது ஆண்டு பட்டமளிப்பு விழாவானது எம்.ஐ.இ.டி கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு எம்.ஐ.இ.டி. கல்வி நிறுவனங்களின் தலைவர் அல்ஹாஜ்  முகமது யூனுஸ் அவர்கள் தலைமை வகித்து தலைமை உரையாற்றினார். எம்.ஐ.இ.டி கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் முனைவர் அப்துல் ஜலீல் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இவர் தன்னுடைய சிறப்புரையில் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கல்வியே மிக சிறந்த மூலதனமாக செயல்படுகிறது என எடுத்துக் கூறினார். மேலும் பட்டம் பெறுகின்ற மாணவர்கள் அனைவரும் இன்று வரை கல்லூரியோடு தொடர்பிலிருந்து கல்லூரியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது போல் தற்பொழுது பட்டம் பெறுகின்ற மாணவர்களும் முன்னாள் மாணவர்களாக தங்களை இணைத்துக்கொண்டு கல்லூரியின் வளர்ச்சிக்கு பங்காற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


இவ்விழாவிற்கு அகில இந்திய தொழில் நுட்ப கல்விக் குழுமத்தின் தலைவர் (ISTE) முனைவர் பிரதாப்சிங்க் காகாசாஹெப் தேசாய் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி 369 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி மாணவர்களிடையே பட்டமளிப்பு விழா உரையாற்றினார். இவர் தன்னுடைய உரையில் இந்த போட்டி நிறைந்த உலகில் இன்றைய பொறியாளர்களுக்கான சவால்கள் என்ன அதை எதிர் கொள்வதற்கு தங்களை எவ்வாறு தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என விரிவாக எடுத்துக் கூறினார். வாழ்க்கை என்பது மலர் படுக்கையல்ல எனவும் எப்பொழுதும் சவால்களை சந்திக்க தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.


எந்த ஒரு செயல்களிலும் நம்முடைய அணுகுமுறையே நம்முடைய வெற்றியை தீர்மானிப்பதாகவும் அதுவே நம்மை சிறந்த பொறியாளர்களாக அடையாளப்படுத்துவதாகவும் தெரிவித்தார். ஒவ்வொரு விடியலும் ஒரு புதிய வாய்ப்பை உருவாக்குவதாகவும் அதை எதிர்கொள்வதற்கு வெளி உலக அறிவு அவசியம் என்பதையும் தெளிவு படுத்தினார். இதற்கு இன்றைய இளைஞர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்


முன்னதாக இந்த வருடத்திற்கான நீதிபதி M. பக்கீர் முகமது சுழல் கோப்பையானது பல்கலைக்கழக தேர்வில் முதலிடம் பிடித்த மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 369 மாணவர்கள் கலந்துகொண்டு பட்டங்களை பெற்றனர். இவ்விழாவிற்கு வருகை தந்த மாணவர்கள், பெற்றோர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் எம்.ஐ.இ.டி. பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் A. நவீன் சேட் அவர்கள் வரவேற்று கல்லூரி கடந்து வந்த பாதை, அதன் வளர்ச்சி மற்றும் சாதனைகளை தன்னுடைய பட்டமளிப்பு விழா அறிக்கையில் எடுத்துக் கூறினார்.


ஜீவானந்தம் ஆங்கிலத் துறை பேராசிரியர் இன்றைய சிறப்பு விருந்தினர் அவர்களை அறிமுகப்படுத்தினார். இறுதியாக. கட்டிடவியல் துறை தலைவர் முனைவர் PV. பிரேமலதா அவர்கள் நன்றி உரையாற்றினார். இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழாவின் ஒருங்கிணைப்பாளரான முனைவர் A. அப்பாஸ் அலி மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

Post a Comment

0 Comments