வரும் லோக்சபா தேர்தலில் அமைச்சர் கேஎன் நேருவின் மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் தேர்தல் பிரசாரத்தில் பட்டாசு வெடித்தது, 50க்கும் அதிகமான காரில் சென்றது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் அவர் மீது அதிரடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலின்போது பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சிக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பாரிவேந்தர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
வரும் தேர்தலில் பாரிவேந்தர் பாஜக கூட்டணியில் உள்ளார். பாஜக கூட்டணியில் அவர் மீண்டும் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த முறை தாமரை சின்னத்தில் அவர் களமிறங்கிறார்.
அதேபோல் திமுக சார்பில் பெரம்பலூர் தொகுதியில் அமைச்சர் கேஎன் நேருவின் மகன் அருண் நேரு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் என்டி சந்திரமோகன், நாம் தமிழர் சார்பில் ஆர் தேன்மொழி வேட்பாளராக களமிறங்கி உள்ளனர். இந்த வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தீவிரமாக பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.குறிப்பாக அமைச்சர் கேஎன் நேருவின் மகன் அருண் நேரு தொகுதியில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தான் நேற்று கேஎன் நேரு பிரசாரத்தில் 50க்கும் அதிகமான வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. வாகனங்களை பயன்படுத்த தேர்தல் அதிகாரியிடம் அனுமதி கட்டாயம். ஆனால் அனுமதியின்றி வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக தேர்தல் பறக்கும் படை அலுவலர் சீனிவாசன் புகாரளித்தார். அதேபோல் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசு வெடிக்கப்பட்டுள்ளது. இதில் பட்டாசு வெடித்து சிதறியதில் சிலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக லாடபுரம் கிராம நிர்வாக அலுவலர் செந்தில் ராஜா புகாரளித்தார்.
0 Comments