திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் உவேசா பேரவை நிறைவு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் கி. குமார் விழாவிற்குத் தலைமையேற்றுத் தலைமையுரை வழங்கினார்.
தமிழ்த் துறைத்தலைவர் முனைவர் சி. காந்தி முன்னிலை வகித்தார். இவ்விழாவில் வணிக மேலாண்மையில் துறைப் பேராசிரியர் ஜஸ்டின் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று "போட்டித் தேர்வுகளில் தமிழின் பங்கு" என்ற பொருண்மையில் சிறப்புரையாற்றினார். போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி சார்ந்த வினாக்கள் இடம்பெறும் தன்மையினையும் தமிழ்த்துறை சார்ந்த மாணவ மாணவிகள் போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தங்களுக்கான வேலை வாய்ப்பினைப் பெறும் வழிமுறைகளையும் விரிவாக எடுத்துரைத்தார். தமிழ் படித்தோருக்கான வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளதையும் அதனைப் பெறுவதற்கு மாணவ மாணவிகள் எவ்வாறெல்லாம் தங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும் என்பது குறித்து மாணவர்கள் மனம் உணரும் வண்ணம் விரிவாக விளக்கினார். முன்னதாக முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு மாணவி செல்வி லாவண்யா ஸ்ரீ வரவேற்புரை வழங்கினார்.
நிறைவாக முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி சங்கவி நன்றியுரை நல்கினார். உ.வே.சா பேரவைத் துணைத் தலைவர் பேராசிரியர் ராமதாஸ் அவர்கள் விழாவை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்தார். பல்வேறு துறை சார்ந்த பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்ட திரளானோர் விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
நிருபர் ரூபன்
0 Comments