பாரம்பரியப் பெருமைகள் மிகுந்த திருச்சி தேசியக்கல்லூரியில் பாரதியார் விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலைமாமணி சொல்லின்செல்வர் முனைவர். வைகைச்செல்வன் முன்னாள் பள்ளிக்கல்வி, இளைஞர் நலன், விளையாட்டு, கலை பண்பாடு மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் சிறப்புவிருந்தினராகப் பங்கேற்று “பாரதி – யார்?” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
அவர்தம் உரையில், “நமக்குத் தொழில் கவிதை; நாட்டிற்கு உழைத்தல்; இமைப்பொழுதும் சோராதிருத்தல்” எனும் வரிகளுக்கு இணங்க வாழ்ந்தவர் பாரதியார். நாட்டுப்பற்றும் விடுதலை உணர்வும் மிகுந்த கவிதைகளை நமக்குத் தந்தவர். தேசியத்தையும் தெய்வீகத்தையும் தம் இரு கண்களாகப் போற்றியவர் பாரதியார். புதிய சொற்களைத் தமிழ் கூறும் நல்லுலகிற்கு அறிமுகம் செய்தவர் அவரே. பாரதியாரின் சொல் ஆளுமை தனித்துவம் நிறைந்தது. அப்படிப்பட்ட சொல் ஆற்றலையும் நாட்டுப்பற்றையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
முன்னதாக, கல்லூரியின் செயலர் கா. ரகுநாதன் அவர்கள் முன்னிலை வகிக்க, கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர் த .முத்துராமகிருஷ்ணன் அவர்கள் தலைமை ஏற்க, தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் சி. காந்தி அவர்கள் வரவேற்க, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் க. புவனேஸ்வரி நன்றி கூறினார். பாரதியார் விழா நிகழ்வுகளைத் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ச. கருத்தான் தொகுத்து வழங்கினார் . மாணவர்களும் தமிழாய்வுத்துறைப் பேராசிரியர்களும் தமிழ் ஆர்வலர்களும் திரளாகக் கலந்து கொண்ட இந்த நிகழ்வு பாரதியாரின் பெருமைகளை வருங்காலத் தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் சிறப்பாக நடந்தேறியது.
நிருபர் ரூபன்

0 Comments