திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு சார்பில் திருச்சி உய்ய கொண்டான் கால்வாய் வரலாறு குறித்து அறிந்து கொள்ள, திருச்சி ஓர் பார்வை ஓர் பயணம் நிகழ்வினை திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு நிறுவனத் தலைவர் விஜயகுமார், சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், பாலிமர் பணத்தாள்கள் சேகரிப்பாளர் இளம்வழுதி, வரலாற்று ஆசிரியர் அரிஸ்டோ வசந்தகுமார் உள்ளிட்டோர் மேற்கொண்டனர். திருச்சி உய்ய கொண்டான் கால்வாய் வரலாறு குறித்து திருச்சி வரலாற்று அலுவலர் குழு நிறுவனத் தலைவர் விஜயகுமார் பேசுகையில், திருச்சிக்கு மேற்கு திசையில் 20 கி.மீ. தொலைவில் திருச்சி-கரூர் சாலையில் உள்ளது பேட்டவாய்த்தலை. இவ்வூரை பேட்டவாய்த்தலை என்றும் வெட்டுவாய்த்தலை என்றும் அழைக்கின்றனர். வாய்த்தலை என்பது தலைவாய் என்பதன் மறு பெயர் ஆகும். ஆறுகளிலிருந்து வெட்டப்படும் கால்வாய்களின் முதல் இடத்திற்குத் தலைவாய் என்ற பெயர் உண்டு. இவ்விதம் காவிரியிலிருந்து வெட்டப்பட்ட உய்யக்கொண்டான் வாய்க்காலின் தலை இடத்தைக் கொண்டிருப்பதால் இப்பெயர்களால் அழைக்கப்படுகின்றது
நம் சந்ததியினருக்காக, நம் எதிர்கால வளர்ச்சிக்காக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தண்ணீரின் தேவையை, தண்ணீரின் அருமையை, தண்ணீரின் அவசியத்தை நன்குணர்ந்த மாமன்னன் இராஜராஜ சோழன் எண்ணத்தால், உயர் உள்ளத்தால், மக்களின் அயரா உழைப்பால், மக்களின் வியர்வையில் நனைந்திருந்த ஆற்றில், காவிரி, மற்றும் கோரையாற்று நீர் உய்ய கொண்டான் ஆறாக, கால்வாயாக விரைந்து ஓடுகிறது.
ஒரு சிற்றூரில் இருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆயிரக்கான மக்கள் கடப்பாறை, மண் வெட்டி, மூங்கில் கூடைகள் முதலானவற்றை சுமந்து ஆயிரக்கான மக்கள் உழைப்பில்
பூமியைப் பிளந்து கோடு போட்டது போல்
புதிதாய், ஓர் ஆறு, மெல்ல மெல்ல உருப் பெற்றது உய்ய கொண்டான் ஆறு,
ஆற்றின் நீளம் வளர கிளையாறுகள் பரந்து விரிகின்றன.வாழ்நாள் எல்லாம், ஏக்கத்தோடு, வானம் பார்த்திருந்த, ஏரிகள், குளங்கள் அனைத்தும், நீராலும், மகிழ்ச்சியாலும் ததும்பி வழிகின்றன.வயல் வெளிகள் செழித்து எழுகின்றன.
பேட்டைவாய்த்தலையிலிருந்து பிரிந்து
உய்ய கொண்டான் கால்வாய்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குள் 8 கிமீ பாய்ந்து வாழவந்தான்கோட்டை ஏரி வழியாக, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேராண்டி ஏரியுடன் முடிவடைகிறது இக்கால்வாய். சுமார் 71கி.மீ. நீளமும், 120 கிளை வாய்க்கால்களும் உடைய இந்த கால்வாய் மூலம் 32,742 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறுகின்றன.
ராஜராஜ சோழன் பலநூறு ஆண்டுகளாக உயிர்ப்புடன் இருந்து மக்களுக்கு பலன் கொடுத்து வந்த உய்ய கொண்டான்
கால்வாய் காலப்போக்கில் நாகரிக வளர்ச்சியில் குப்பைகளும், கழிவுநீரும் கலக்கின்றன. வரலாற்று சிறப்புமிக்க கால்வாயினை பராமரிக்க வேண்டும் என்றார்.

0 Comments