திருச்சி மாவட்டம் லால்குடியில் அரசியல் சூழல் பரபரப்பாக மாறியுள்ளது. ஜல்லிக்கட்டு பேரவை துணைத்தலைவரும், அதிமுகவைச் சேர்ந்தவருமான லால்குடி காத்தான், கட்சியின் செயல்பாடுகள் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், நீண்ட காலமாக கட்சிக்காக உழைத்து வரும் அடிப்படை தொண்டர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல், சமீபத்தில் கட்சியில் இணைந்தவர்களுக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்படுவது ஏன் என கேள்வி எழுப்பினார். குறிப்பாக, லால்குடி சட்டமன்ற தொகுதிக்கான அதிமுக வேட்பாளராக புதிதாக இணைந்த லீமா ரோஸ் அறிவிக்கப்பட்டது குறித்து அவர் அதிருப்தி தெரிவித்தார்.மேலும், முன்னாள் எம்.பியும், திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான பா. குமார் மீது ஜாதி சார்ந்த செயல்பாடுகள் குறித்த குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து, கட்சி தலைமை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஜல்லிக்கட்டு தொடர்பாகவும் அவர் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார். ஒரு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு இரும்பு பேரிக்கார்டுகள் உள்ளிட்ட ஏற்பாடுகளுக்கு சுமார் 7 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது என்றும், லால்குடி தொகுதியில் 35க்கும் மேற்பட்ட இடங்களில் இத்தகைய போட்டிகள் நடைபெறுவதால், இந்தச் செலவுகளை ஏற்கும் வேட்பாளருக்கு ஜல்லிக்கட்டு பேரவை ஆதரவு வழங்கும் என தெரிவித்தார். மேலும், மாடு பிடிக்கும் வீரர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து, வரும் 31ஆம் தேதி லால்குடியில் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் 50,000 பேர் பங்கேற்கும் மிகப்பெரிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில், எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டம் லால்குடி தொகுதி அரசியல் நிலையை தீர்மானிக்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


0 Comments