திருச்சி அமிர்தம் சமூகசேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வருவதுடன் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க அரிய, அல்லது பழமையான புத்தகங்களைத் தேடிப் பிடித்து, அவற்றை ஒழுங்கமைத்து, இல்லத்திலேயே இலவச நூலகம் அமைத்துள்ளார்.
ஆசிரியர், பொருள், அல்லது காலம் அடிப்படையில் புத்தகங்களை வகைப்படுத்தி, அட்டவணைப்படுத்தி உள்ளார்.வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்துவதுடன், வரலாற்று ஆவணங்களைச் சேமித்து வைத்து வரும் சமூக செயற்பாட்டாளர் விஜயகுமாரிடம் எழுத்தாளர் ஹரிஷ் பிரபாகரன் எழுதிய குட்டி குடித்தல் குழுந்தலாயி அம்மன் வரலாறு நூலினை வழங்கி பேசுகையில்,
குலதெய்வம், வீட்டுக் கன்னி தெய்வம், காவல் தெய்வம், எல்லை தெய்வம், இன தெய்வம் உள்ளிட்ட பல தெய்வங்கள் உள்ளன. இவற்றைப் பற்றியும், குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம் குறித்ததொரு புரிதல் இப்போது மக்களிடையே வந்துள்ள நிலையில், திருச்சி உறையூர் செங்குளத்தான் குழுந்தலாயி அம்மன் வரலாற்றை எடுத்துரைத்துள்ளேன்.
சோழர்களின் தலைநகராக உறையூர் இருந்துள்ளது."16-ஆம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சியின் அரசி ராணி மங்கம்மாளின் ஆட்சிக் காலத்தில் விருப்பாச்சிபுரம் எல்லையில் உழவுத் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் நிலத்தில் கடப்பாரையால் குத்திய போது, ரத்தம் பீறிட்டு வெளியே வந்த அம்மன் குழுந்தலாயி அம்மனானதும், அது பின்னர் தெய்வக் குழந்தையாக உருப்பெற்றும் வளர்ந்துள்ளது.அதை அச்சுறுத்திய ராவுத்தன் என்ற கொடியவனின் தொல்லையில் இருந்து தன்னைக் காப்பாற்ற கொல்லிமலையில் மாசி பெரியண்ணசாமிக்கு காவலாய் இருக்கும் கருப்பண்ணசாமியிடம் வேண்ட அவர் செவிசாய்த்து அண்ணனாக வந்து குழுந்தலாயி அம்மனைக் காத்துள்ளார். இதனால், குழுந்தலாயி அம்மன், தனக்கு சைவ பூஜையும், பின்னே கருப்பண்ணசாமிக்கு ஆட்டு ரத்தம் குடிக்கும் பூஜையும் நடத்தப்படும் என்று கூறினார்.இதையொட்டியே ஆண்டுதோறும் விழாக்கள் நடைபெறுகின்றன. அம்மன் எல்லைகள், விழாக்கள், மருளாளி சுவாமி, தாரை, இரட்டைக்கிளி மாலை, வழிபாடுகள், கல்வெட்டு உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் குட்டிக்குடித்தல் குழுந்தலாயி அம்மன் வரலாறு நூலில் இடம்பெற்றுள்ளன என்றார்.

0 Comments