// NEWS UPDATE *** பள்ளியில் ஆசிரியை வெட்டிக்கொலை சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் உள்ளே புகுந்து ஆசிரியை ஸ்ரீவித்யா வெட்டி படுகொலை குடும்ப பிரச்னை காரணமாக அவரது கணவர் விஜயமுருகனே வெட்டிக் கொலை செய்த‌தாக தகவல்; தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றன *** தமிழகத்தின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் முயற்சியை முறியடிப்பதே காங்கிரஸின் இப்போதைய முதன்மையான கடமை - காங்கிரஸ் ஊடக பிரிவு மாநில தலைவர் ஆனந்த் ஶ்ரீனிவாசன் பேட்டி.

தமிழகத்தின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் முயற்சியை முறியடிப்பதே காங்கிரஸின் இப்போதைய முதன்மையான கடமை - காங்கிரஸ் ஊடக பிரிவு மாநில தலைவர் ஆனந்த் ஶ்ரீனிவாசன் பேட்டி.

காங்கிரஸ் கட்சியின் செய்தி மற்றும் ஊடக பிரிவு மாநில தலைவர் ஆனந்த் ஶ்ரீனிவாசன், திருச்சி மெயின்கார்டு கேட் பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது அவர் கூறுகையில்:--



காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் 10 முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. வளர்ச்சி, கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் மகளிர் நலம் போன்றவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. 


மத்திய அரசு வழங்கும் ரூ.6000 நிதி தற்போது நிலம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. ஆனால், உண்மையாக உழைக்கும் குத்தகை விவசாயிகளுக்கு இந்த நிதி சென்றடைய வேண்டும். மத்திய அரசு மறுத்தால் மாநில அரசு தனது பதிவேடுகளைக் கொண்டு இதைச் செயல்படுத்த வேண்டும்.


​தமிழகத்தில் பல இடங்களில் ரேஷன் கடைகளின் தரம் மோசமாக உள்ளது. அவற்றை நவீன ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போல மாற்ற வேண்டும். ஏ-கிரேடு அரிசி வழங்கப்பட வேண்டும் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான நாட்களில் பொருட்களை வாங்கிக் கொள்ளும் 'ஃப்ளெக்ஸிபிலிட்டி' வழங்கப்பட வேண்டும்.


​அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். ஆங்கிலம் தெரிந்தால்தான் ரூ.30,000 முதல் ரூ.35,000 வரை ஊதியம் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் கிட்டும். தமிழ் கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும், ஆனால் பயிற்று மொழி ஆங்கிலமாக இருக்க வேண்டும்.


ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.டி போன்ற போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி மையங்களை அமைக்க வேண்டும். வார்டு வாரியாக 'டியூஷன் அக்கா' என்ற திட்டத்தின் மூலம் வேலையில்லாத பட்டதாரி பெண்களுக்கு வேலைவாய்ப்பையும், மாணவர்களுக்குக் கூடுதல் கல்வியையும் வழங்கலாம்.


ஆரம்பச் சுகாதார நிலையங்களில் மனநல ஆலோசனை வழங்கப்பட வேண்டும் மற்றும் அவை 24 மணி நேரமும் இயங்க வேண்டும்.


தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால், 2030-க்குள் ரேபிஸ் நோயினால் உயிரிழப்புகள் இல்லாத மாநிலமாகத் தமிழகத்தை மாற்றத் தனித் திட்டம் தேவை.


டெல்டா மற்றும் இதர மாவட்டங்களில் கூடுதலாக 1,000 குளிர்சாதனக் கிடங்குகளை (Cold Storage) அமைக்க வேண்டும். பயிர் காப்பீடு தொகையை 60 நாட்களுக்குள் வழங்க வேண்டும். வாய்க்கால்களைத் தூர்வாரி, சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனத்திற்கு கூடுதல் மானியம் வழங்க வேண்டும். நிலத்தடி நீரைப் பாதுகாக்க மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.


தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள சுமார் 3.5 லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். கல்வித் துறையில் 80,000, காவல்துறையில் 30,000 எனப் பல துறைகளில் வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. 

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், தமிழகம் போன்ற மாநிலங்கள் நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்டால் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 


​ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் தற்போது அஸ்ஸாம் மற்றும் கேரளா தேர்தல்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். டெல்லியில் தென் மாநிலங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தொகுதி மறுவரையறை (Delimitation) தொடர்பான சில சதித்திட்டங்களை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. இதை தடுப்பது தான் எங்களது முதல் வேலை. நாடாளுமன்றத்தில் இதைப் தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் எங்கள் தலைவர்கள் உள்ளனர்.


​அண்ணாமலையும், எடப்பாடி பழனிசாமியும் பதவிக்காகத் தமிழகத்தின் உரிமைகளை அடமானம் வைக்கத் தயாராக உள்ளனர். தமிழகத்தின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் முயற்சியை முறியடிப்பதே காங்கிரஸின் இப்போதைய முதன்மையான கடமை. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிந்ததும், 18-ஆம் தேதி ராகுல் காந்தி திருச்சிக்கு வந்து பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளது.


​மேலும், திமுகவுக்கும் எங்களுக்கும் கொள்கை ரீதியாகச் சில வேறுபாடுகள் இருந்தாலும், தற்போதைய சூழலில் தமிழகத்தைக் காக்க ஒன்றிணைந்து செயல்படுவதாக தெரிவித்தார்.


இந்த பேட்டியின் போது காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ், தெற்கு மாவட்ட தலைவர் ராஜலிங்கம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments