// NEWS UPDATE *** கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய அரசுப்பணி ரத்து - -உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு *** திருச்சி நறுங்குழல் நாயகி நகர் பூங்கா நில விவகாரம் - அரசு இடம் என உறுதிப்படுத்திய பின்னும் தொடரும் பதற்றம் - ஆட்சியரிடம் இந்து அமைப்புகள் மனு!

திருச்சி நறுங்குழல் நாயகி நகர் பூங்கா நில விவகாரம் - அரசு இடம் என உறுதிப்படுத்திய பின்னும் தொடரும் பதற்றம் - ஆட்சியரிடம் இந்து அமைப்புகள் மனு!

திருச்சி மாநகராட்சி 40-வது வார்டுக்கு உட்பட்ட வடக்கு இந்திரா தெரு, நறுங்குழல் நாயகி நகர் பகுதியில் பூங்காவுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தை ஆக்கிரமித்து பள்ளிவாசல் கட்ட முயன்ற விவகாரம் தொடர்பாக, உரிய நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் இந்து அமைப்பினர் மற்றும் பாஜக பிரதிநிதிகள் முறையிட்டுள்ளனர்.

நறுங்குழல் நாயகி நகர் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகவும், பூங்கா அமைப்பதற்காகவும் ஒதுக்கப்பட்ட இடத்தில் திடீரென பள்ளிவாசல் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கு அப்பகுதி பொதுமக்களும், பல்வேறு இந்து அமைப்பினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உடனடியாகப் பணியைத் தடுத்து நிறுத்தினர்.


இதனைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி ஆணையர் மற்றும் திருச்சி மாவட்ட காவல் துறை ஆகியோருக்கு அதிகாரப்பூர்வமான புகார்கள் மற்றும் மனுக்கள் அனுப்பப்பட்டன.பொதுமக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, சர்ச்சைக்குரிய இடத்தை முறையாக அளவீடு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.அதன் அடிப்படையில், அரியமங்கலம் மாநகராட்சி இணை ஆணையர், திருவெறும்பூர் வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் அந்த நிலம் அளவீடு செய்யப்பட்டது. 

இந்த அளவீட்டின் முடிவில், சர்ச்சைக்குரிய இடம் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட அரசு இடம் என்பது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டது. நிலம் அரசுடையது என்று உறுதி செய்யப்பட்ட போதிலும், மீண்டும் மீண்டும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் அப்பகுதியில் தொழுகை நடத்த முயல்வதாகவும், தடுத்து நிறுந்திய இந்து அமைப்பினர் மீது பொய் வழக்குகள் பதிய சிலர் முற்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.


இதையடுத்து விஷ்வ இந்து பரிசத் மாவட்டத் துணைத் தலைவர் அழகு யுவராஜ், பாஜக பட்டியல் அணி மாநில அரசு தொடர்பு இணை அமைப்பாளர் இந்திரன், விஷ்வ இந்து பரிசத் திருவெறும்பூர் ஒன்றிய பிரகண்ட செயலாளர் பிரபாகரன் ஆகியோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் புகார் அளித்தனர். 


மேலும் சர்ச்சைக்குரிய பூங்கா இடம் மாநகராட்சிக்குச் சொந்தமான அரசு இடம் என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில், உடனடியாக அப்பகுதியில் அரசு இடம் என்ற பெயர்பலகையை நிறுவ வேண்டும். அரசு இடத்தைப் பாதுகாக்க முயன்ற இந்து அமைப்பினர் மீது முஸ்லிம் அமைப்பினர் தரப்பிலிருந்து வழக்கு பதிய முற்படுவதால், இது பொதுச் சொத்து மற்றும் அரசு இடம் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், அந்த வழக்கை அரசே ஏற்று நடத்த வேண்டும்.

பூங்கா நிலத்தை ஆக்கிரமிப்பு முயற்சிகளிலிருந்து முழுமையாகப் பாதுகாத்து, அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments