திருச்சி சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ள புனித வளனார் கல்லூரிக்கு சொந்தமான வணிக வளாகத்தில், புதிதாக 'அல்-மதினா' உணவகம் திறக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த இந்தக் கடையின் முன்பகுதியை ஆக்கிரமித்து, சிலர் தள்ளுவண்டி கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வந்துள்ளனர்.தற்போது புதிய உணவகம் தொடங்கப்பட்டு இயங்கி வரும் நிலையிலும், அங்கிருந்த தரைக்கடை வியாபாரிகள் கடையின் பாதையை மறைத்தவாறு ஆக்கிரமிப்பை அகற்றாமல் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இதனால் உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த முடியாமலும், கடைக்குள் சென்று வர வழி இல்லாமலும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து உணவக நிர்வாகத் தரப்பில் மாநகராட்சி நிர்வாகம், கோட்டை காவல் நிலையம் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் முறைப்படி மனுக்கள் அளிக்கப்பட்டன. இருப்பினும், துறை சார்ந்த அதிகாரிகள் நேரடியாக வந்து பார்வையிடவோ, விசாரிக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
கடை திறப்பதற்கு முன்பாகவே முறைப்படி மனு அளித்தபோது தெரிவிக்காமல், பிரச்சனை முற்றிய நிலையில் எங்கள் எல்லை இல்லை என மாநகராட்சி நிர்வாகம் கைகழுவுவது நியாயமற்றது என்றும், தங்களை அதிகாரிகள் தொடர்ந்து அலைக்கழிப்பதாக உணவக நிர்வாகத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர்.சாலையோர வியாபாரிகள் நலன் கருதி அரசு வெண்டிங் கமிஷன் சான்றிதழ் வழங்கி வரும் நிலையில், இங்குள்ள சில வியாபாரிகள் எந்தவித அதிகாரப்பூர்வ அட்டையோ அல்லது அங்கீகாரமோ இன்றி சங்கம' என்ற பெயரில் போலி பிம்பத்தை உருவாக்கி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.சி.ஐ.டி.யு போன்ற தொழிற்சங்கங்களின் பெயரைக் கூறிக்கொண்டு, அனுமதி இல்லாத கடைகளையும் சட்டவிரோதமாக இயங்க வைக்கின்றனர்.
அரசு அங்கீகாரமோ, அடையாள அட்டையோ இல்லாத நபர்கள், இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு நாளொன்றுக்கு ₹1000 முதல் ₹1200 வரை உள்வாடகைக்கு விட்டுப் பணம் பறிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
முறையாக முதலீடு செய்து, அனைத்து அரசு அனுமதிகளுடனும் தொழில் தொடங்கும் சிறு/நடுத்தர வணிகர்களின் வாழ்வாதாரம் இது போன்ற சட்டவிரோத ஆக்கிரமிப்புகளால் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
மாநகராட்சி அதிகாரிகளும் காவல் துறையும் எல்லைப் பிரச்சனையைச் சுட்டிக்காட்டி தட்டிக் கழித்தால், நெடுஞ்சாலைத் துறை உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்குமா?
வெண்டிங் அசோசியேஷன் என்ற பெயரில் போலி கார்டுகளை வைத்துக்கொண்டும், கடையின் பாதையை மறித்து உள்வாடகைக்கு விட்டு ஏமாற்றுபவர்கள் மீது யார் நடவடிக்கை எடுப்பது?
கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களை நிறுத்த விடாமலும், வழிமறித்தும் இடையூறு செய்யும் நபர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?
முறையாக மனு அளித்தும் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படும் வியாபாரிகளை காக்க, திருச்சி மாநகராட்சி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் காவல் துறை இணைந்து உடனடி தீர்வு காண வேண்டும் என்பதே அப்பகுதி வணிகர்களின் முதன்மையான கோரிக்கையாக உள்ளது.




0 Comments