தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம். சரீப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் கூறுகையில்...தமிழகத்தில் உள்ள மத்திய சிறைச்சாலைகள், கிளைச்சிறைச்சாலைகள், சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளிகள் மகளிர் தனிச் சிறைகள், இவற்றில் தொடர்ச்சியாக மனித உரிமை மீறல் நடக்கின்ற செய்திகள் தினம்தோறும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இது இயல்பான ஒன்றாக மாறி வருகிறது. மொத்தம் உள்ள 138 தமிழக சிறைகளில் மனித உரிமை மீறல் இல்லாத சிறைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். சிறைச்சாலையில் இருந்தாலும் கல்வி உரிமை, வழிபாட்டு உரிமை, தொழில்கல்வி உரிமை, சட்ட உரிமை என பல உரிமைகளை அரசியல் சட்டம் வழங்கி இருந்தாலும், அவற்றை வழங்குவதற்கு பல சிறை அதிகாரிகள் தயாரில்லை.
சிறைவாசிகள் உரிமைகளுக்காக தனிச்சட்டம் நிறைவேற்ற வேண்டும் என பலமுறை உச்சநீதிமன்றமும், பல உயர்நீதிமன்றங்களும் கூறிய பின்னரும், மத்திய அரசும், தமிழக அரசும் இவற்றை கண்டு கொள்வதில்லை.
சமீபத்தில் புழல் சிறை அதிகாரிகள் மீது புகார் கூறிய ஒரே காரணத்திற்காக 12 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில் இருவரையும் சிறை உயர் அதிகாரிகள் மகேஸ்வர் தயாள், சையத், துணை ஜெயிலர்கள் மணிகண்டன், சாந்தகுமார் உள்ளிட்டோர் கடந்த வாரம் கொடூரமாக தாக்கியுள்ளனர். இவர்கள் மீதான ஒரே தவறு சிறை உணவு சரியில்லை என நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தான். சிறையில் நடக்கும் அநியாய அக்கிரமங்களை, ஊழலை சிறை கைதிகள் வெளியே சொல்லிவிட்டால் கைதிகள் கதி அதோகதி தான்.அதுவும் இஸ்லாமிய கைதிகள் என்றால் அவர்களை இஸ்லாமிய கைதிகளை விட்டே அடிக்கச் சொல்லும் நிலை, ஒரு சாதி கைதி கேள்வி கேட்டால் அதே சாதி வார்டன்களை விட்டு அடிக்கச் செய்வது என்ற ஆங்கிலேயர் கால சூழல் இன்னமும் கடைபிடிக்கப்படுகிறது. எனவே கைதி களும் மனிதர்கள் தான் என்கிற உண்மையை அரசு புரிந்து கொண்டு உடன் நடவடிக்கை எடுத்திட வேண்டும். இன்றைய முதலமைச்சரும், சட்ட அமைச்சரும் கூட சிறைச்சாலையில் இருந்தவர்கள் தான். இதையெல்லாம் அறிந்தவர்கள் தான். எனவே அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்ய வேண்டும். உடனடியாக கைதி கள் குறைதீர்க்க தனி ஆணையம் அமைத்திட வேண்டும். புழல் சிறையில் தொடர்ந்து தாக்கப்படுகிற கைதிகளுக்கு நீதி வேண்டும் என்கிற கோரிக்கையையும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி முன்வைக்கிறது என தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.செரீப் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்
0 Comments