நேற்றைய முன்தினம் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் அவர்களின் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.
இந்த நிலையில் நெரிசலில் சிக்கி, அதனால் பாதிக்கப்பட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி கட்சியினருடன் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதன் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்தவர், இது வெறும் விபத்தல்ல.. படுகொலை என்று குற்றம் சாட்டினார்.அரசியல் களத்தை சிலர் 'சினிமா சூட்டிங்' ஆக பயன்படுத்த நினைத்தது தான் இவ்வளவு பெரிய துயரத்துக்கு காரணம் என்றும் கூறினார்.
அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையத்தின் தகவல்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டவர், நேற்று உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்த முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகளை பாராட்டுவதாகவும் கூறினார்.
இது போன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருக்க அரசியலாளர்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் என அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இச்சந்திப்பில் மாநிலச் செயலாளர்கள் கலைக்குயில். இப்ராஹிம், ஈரோடு பாபு ஷாகின்சா, மாநில துணைச் செயலாளர் ரஹ்மான், இளைஞரணி மாநில செயலாளர் திருச்சி ஷெரீப், கரூர் மாவட்ட செயலாளர் இஸ்மாயில், ஈரோடு கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் ஹாரிஸ், திருச்சி மாவட்ட செயலாளர் பாபு ஆகியோருடன் ஏராளமான மஜக நிர்வாகிகளும் உடன் வருகை தந்தனர்.
0 Comments