மண் அள்ளும் மற்றும் கட்டுமானப் பணிகளுக்கான இயந்திரங்கள் / உபகரணங்களின் தயாரிப்பில் இந்நாட்டில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ஜேசிபி இந்தியா, தமிழ்நாட்டின் திருச்சி மாநகரில் தனது தயாரிப்புகளுக்கான புதிய விற்பனை மற்றும் சர்வீஸ் பணிமனையை உள்ளடக்கிய வளாகத்தை ‘கேயுஎன் கேபிட்டல் ஆட்டோமோட்டிவ்’ என்ற பெயரில் இன்று திறந்திருக்கிறது. இந்த நவீன வளாகம், இப்பகுதி முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்ட உட்கட்டமைப்புத் தீர்வுகளை வழங்குவதில் ஜேசிபி இந்தியா நிறுவனம் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

50,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த புதிய டீலர்ஷிப்பின் தலைமையகம், ஜேசிபி-யின் அனைத்து தயாரிப்புகளையும் விற்பனைக்காக காட்சிப்படுத்துவதுடன், உலகத்தரம் வாய்ந்த பராமரிப்பு சேவைகளை (சர்வீஸ்) ஒரே இடத்தில் வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பயிற்சி பெற்ற 86 விற்பனை மற்றும் சேவைப் பிரிவு நிபுணர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த வளாகத்தின் பணிமனையில் ஆறு பழுதுபார்க்கும் பிரிவுகள் (workshop bays), ஒரு வெல்டிங் பிரிவு மற்றும் புதிய தயாரிப்புகளை வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்வதற்கு முந்தைய பரிசோதனைப் பிரிவு (PDI Bay) ஆகியவை உள்ளன. நிகழ்நேர இயந்திரக் கண்காணிப்பிற்கான முழுமையான செயல்பாட்டு வசதி கொண்ட லைவ்லிங்க் கட்டளை மையம், ‘பழுதுபார்ப்பு சேவைக்கான நடமாடும் வாகனம்’ மற்றும் உதிரிபாகங்கள் மற்றும் சேவைக்கான பிரத்யேக வாகனம் ஆகியவை இந்த டீலர்ஷிப்பின் மற்ற சிறப்பம்சங்களாகும். இவை, வாடிக்கையாளர்களுக்கு விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய காலகட்டங்களில் சரியான நேரத்திற்குள் தடங்கலற்ற ஆதரவு எளிதாக கிடைப்பதை உறுதி செய்கின்றன.


இந்த டீலர்ஷிப் தொடக்க விழாவில் பேசிய ஜேசிபி இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான திரு. தீபக் ஷெட்டி, "தமிழ்நாடு மாநிலம், இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார ஆற்றல் மையமாகத் திகழ்கிறது. இம்மாநிலம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 8%-க்கும் மேல் பங்களிப்பை வழங்கி வருகிறது. ஆட்டோமொபைல், ஜவுளி, எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளில் வலுவான உற்பத்தி மையங்களைக் கொண்டு, தொழில்மயமாக்கலில் ஒரு முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு இம்மாநில அரசு வழங்கி வரும் ஆதரவும், தொலைநோக்குடன் கூடிய செயற்பணிகளும் தொழிற்துறைக்கு ஊக்கமும், உற்சாகமும் தருவதாக இருக்கின்றன. திருச்சியில் மேற்கொள்ளப்படும் காவிரி ஆற்றங்கரைத் திட்டம், திருச்சி பன்னாட்டு விமான நிலைய விரிவாக்கம், புதிய சுற்றுச்சாலைகள், அம்ருத் (AMRUT) திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் சிட்டி முன்னெடுப்புகள் மற்றும் நீர்நிலைகளுக்கான புனரமைப்புத் திட்டங்கள் போன்றவை, நம்பகமான செயல்பாட்டை வழங்கும் மண் அள்ளும் (எர்த் மூவிங்) இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களுக்கான தேவையை உயர்த்தி வருகின்றன" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "இப்பிராந்தியத்தின் தேவைகளை நன்கு அறிந்த கூட்டாளியான ‘கேயுஎன் கேப்பிட்டல் ஆட்டோமோட்டிவ்’ உடன் இணைந்து விற்பனை மற்றும் சர்வீஸ்க்கான உலகத்தரம் வாய்ந்த டீலர்ஷிப் வளாகத்தைத் தொடங்கியிருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். ஜேசிபி இயந்திரங்கள், குறிப்பாக இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கட்டுமான உபகரணமாகத் திகழும் புகழ்பெற்ற ஜேசிபி பேக்ஹோ லோடர், அதன் நம்பகத்தன்மை மற்றும் சிறந்த எரிபொருள் சிக்கனத்திற்காகப் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது. புதுமையான கண்டுபிடிப்புகள், மேம்பட்ட தயாரிப்புகள் மற்றும் வலுவான சேவை ஆதரவு ஆகியவற்றில் நாங்கள் செய்யும் முதலீடுகள், எங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் முதலீட்டிற்கு சிறந்த இலாபத்தைப் பெறுவதை எப்போதும் உறுதி செய்கின்றன. கேயுஎன் கேப்பிட்டல் ஆட்டோமோட்டிவ் உடன் இணைந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான மாநில அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு பங்களிப்பு வழங்குவதை நாங்கள் ஆவலோடு எதிர்நோக்குகிறோம்" என்றார்."
ஜேசிபி-ன் உலகளாவிய பெருநிறுவன அடையாளம் மற்றும் சிறந்த செயல்பாட்டுத் தரங்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விற்பனையகம், நிறுவனத்தின் மேம்பட்ட டெலிமேட்டிக்ஸ் தொழில்நுட்பமான ‘ஜேசிபி லைவ்லிங்க்’-ஐ முழுமையாகப் பயன்படுத்துகிறது. இந்தத் தொழில்நுட்பம், இயந்திரத்தின் செயல்திறன், இருப்பிடம், சேவை அட்டவணைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த நேரடித் தகவல்களுடன் 24/7 அடிப்படையில் இயந்திரங்களின் தொகுப்பைக் கண்காணிக்க உதவுகிறது. மேலும், இந்த விற்பனையகம் ஜேசிபி-யின் டிஜிட்டல் விற்பனை முறைகளுடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டு, நேரடி ஆதரவையும் டிஜிட்டல் வசதியையும் இணைத்து, தரவுகளின் அடிப்படையில் வாடிக்கையாளர்களின் நலனை மையமாகக் கொண்ட ஒரு நேர்த்தியான அனுபவத்தை வழங்குகிறது.
திருச்சியில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த புதிய டீலர்ஷிப் மட்டுமின்றி, கேயுஎன் கேபிட்டல் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் தஞ்சாவூர், கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், பழனி மற்றும் திண்டுக்கல் ஆகிய இடங்களில் மேலும் ஏழு கிளைகளுடன் இயங்கி வருகிறது, இதன் மூலம், இப்பிராந்தியத்தில் உள்ள ஜேசிபி வாடிக்கையாளர்கள், சேவைகளை எளிதாகப் பெறுவது உறுதி செய்யப்படுகிறது.
0 Comments