தமிழக டி.ஜி.பி.,யை நியமிக்க முடியாத கையாலாகாத அரசாக தி.மு.க., அரசு உள்ளது,’’ என்று பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறினார்.இது குறித்து அவர் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் மிகவும் மோசமாக உள்ளது. நெல் கொள்முதலை முறையாக செய்ய, நான்கரை ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். இந்த நான்கரை ஆண்டுகளில், 3.75 லட்சம் மெட்ரிக் டன் நெல் தமிழக அரசால் வீணக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 2 ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும். ஆனால், 600 மூட்டைகள் தான் செய்துள்ளனர். இப்படிப்பட்ட அரசு இருந்து என்ன பயன். நெல் கொள்முதல் செய்ய, 40 ரூபாய் கொடுக்க வேண்டும். மது பாட்டில் விற்றால், 10 ரூபாய் கூடுதலாக வாங்குகின்றனர். இது மிகவும் மோசமான நிலை. மத்திய அரசு குற்றம் செல்வதில் கவனம் செலுத்தும் தமிழக அரசு, கொள்முதல் விஷயத்தில் தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது. உணவு பாதுகாப்புக்கு மத்திய அரசு அதிக நிதி வழங்குகிறது. அப்படி இருந்தும், அதை முறையாக செலவு செய்ய தி.மு.க., அரசு தவறி விட்டது.
கொள்முதல் பிரச்னையில், அ.தி.மு.க., அரசை குற்றம் சொல்லி தப்பிக் பார்க்கின்றனர். தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, ஏழைகளுக்கு அடிப்படை வசதி செய்து தரவில்லை. விவசாயத்துக்கு செலவு செய்யவில்லை. கல்வித்துறைக்கு ஏதுவும் செய்யவில்லை. இதற்கான மத்திய அரசின் நிதியை என்னத்தான் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. கல்வித்துறை விஷயத்தில் கேரளா அரசுக்கு உள்ள புரிதல் கூட, தமிழக அரசுக்கு இல்லை. பி.எம்., ஸ்ரீ திட்டத்தை மொழி பிரச்னையாக சித்தரித்து, கல்வித்துறைக்கு தமிழக அரசு துரோகம் செய்கிறது. சமுதாயத்தை சீர்திருத்த டாஸ்மாக்கை ஒழிக்க வேண்டும் என்று எம்.பி., கனிமொழி சொல்லாமல், ஏதேதோ பேசி வருகிறார். வேலுாரில் வைகோ பேசுகையில், பெரியார் சிலை மீது கை வைத்தால், கையை வெட்டுவேன் என்று வன்முறையை துாண்டும் வகையில் பேசியுள்ளார். இதை கண்டிக்கவும் இல்லை. கண்டுகொள்ளவும் இல்லை. மூத்த அரசியல் தலைவருக்கு இது அழகல்ல. இது என்ன மாதிரியான அரசியல் என்று தெரியவில்லை. இந்து மதத்தை தொடர்ந்து அவமதிக்கும் வகையில், தமிழகத்தில் தினம், தினம் பேசி வருகின்றனர். தமிழகத்துக்கு டி.ஜி.பி.,யை நியமிக்க முடியாத கையாலாகாத அரசாகத்தான் தி.மு.க., அரசு உள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் எந்த தடையும் இல்லை. காவல்துறையில் தி.மு.க., அரசியல் செய்கிறது. கரூர் சம்பவத்தில், ஏன் கரூர் போலீஸ் எஸ்.பி., கலெக்டர் ஆகியோரை ஏன் மாற்றவில்லை. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உடனடியாக மாற்றினீர்கள். இப்போது ஏன் மாற்றவில்லை. தமிழகத்தில் காட்டாட்சியை தி.மு.க., நடத்துகிறது. இது விவசாயிகளுக்கு எதிரான ஆட்சி இவ்வாறு அவர் கூறினார்.



0 Comments