தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருச்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் சமயபுரம் உமர் தலைமையில் வரகனேரி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சம்சுதீன், பொருளாளர் கனி, துணை தலைவர் பிலால், துணை செயலாளர் அமானுல்லாஹ், காதர், இக்பால், சர்புதீன், அன்சர் ஆகியோர் பங்கேற்றனர். இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.
1. ஜம்மு காஷ்மீரில் இயங்கி கொண்டிருந்த மருத்துவகல்லூரி ஒன்று சங்க பரிவாரங்களின் போராட்டத்தால் மூடப்பட்டுள்ளது. போராட்டத்திற்கான காரணம் தான் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. ஒரு கோயில் டிரஸ்டால் ஆரம்பிக்கப்பட்ட இந்த கல்லூரியில் இஸ்லாமிய மாணவர்கள் அதிகம் படிக்கிறார்கள் எனும் காரணத்தை சொல்லி போராட்டம் நடத்தி உள்ளனர். புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கல்லூரி குறித்து சரியாக விளம்பரம் செய்யாததால் 100 மாணவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 40 மாணவர்கள் மட்டும் சேர்ந்துள்ளனர் அதில் 32 பேர் இஸ்லாமிய மாணவர்கள் என்பது சங்க பரிவாரங்களின் கண்களை உறுத்தியுள்ளது. NEET மதிப்பெண்களின் அடிப்படையில் நடந்துள்ள சேர்க்கையையும் மீறி இந்த கல்லூரி மூடப்பட்டதை சங்க பரிவாரங்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியது சங்க பரிவாரங்களின் அறிவின்மையை வெளிப்படுத்துகிறது. சங்க பரிவாரங்களின் இம்முட்டாள்தனத்தை இக்கூட்டத்தின் வாயிலாக வன்மையாக கண்டிக்கின்றோம்.
2. திருப்பரங்குன்றம் மலை சம்பந்தமாக தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்யும் டிவிஷன் பெஞ்சின் சமீபத்திய தீர்ப்பு பெருத்த ஏமாற்றமளிக்கிறது. நூறாண்டுகளாக இருக்கும் ஹிந்து மக்களின் பழக்கத்திற்கும், முன்னர் வந்த தீர்ப்புகளுக்கும் எதிராக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக பெரும்பான்மை ஹிந்து மக்களின் எண்ண ஓட்டங்களுக்கு எதிராகவும் சங்க பரிவார சக்திகளின் எண்ணத்திற்கு ஆதரவாகவும் இத்தீர்ப்பு அமைந்துள்ளது நடுநிலையாளர்களின் உள்ளத்தில் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. தமிழக மக்களிடம் நிலவும் மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட வேண்டும் என இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.
3. கடந்த தேர்தலின் போது இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்து தருவோம் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறி இருந்தது, இஸ்லாமியர்களின் நெடு நாளைய கோரிக்கையை நிறைவேற்றாமல் மறு தேர்தலை நோக்கி இந்த ஆட்சி சென்று கொண்டிருக்கிறது. போராட்டம் நடத்தினால்தான் கோரிக்கைகள் செவியேற்க்கப்படும் என்பது நல்லாட்சிக்கு சான்று கூறாது. எனவே வரும் தேர்தலுக்கு முன் சிறுபான்மை இஸ்லாமியர்களின் ஜீவாதார கோரிக்கையான இட ஒதுக்கீட்டை குறைந்தப்பட்சம் 5 சதவீதமாக அதிகரித்து தருவதன் மூலம் மட்டுமே இஸ்லாமியர்களின் ஏகோபித்த ஆதரவை இக்கூட்டணி பெற முடியும் என பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்


0 Comments