மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ், ஹெல்பின், எம்.ஆர்.டி.டி, உள்ளிட்ட நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்தால் அதிக வட்டி உள்ளிட்ட ஆசை வார்த்தை கூறி பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை வசூலித்தன. ஆனால் சொன்னபடி பணத்தைத் தராமல் ஏமாற்றியதால் சுமார் 60,000 முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ள நிதி நிறுவன இயக்குநர்களின் ஜாமினை ரத்து செய்யக் கோரிய வழக்கை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி பரத சக்கரவர்த்தி விசாரித்தார். அப்போது சுமார் 6,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாகப் பணத்தைத் திருப்பி அளிக்கும் நோக்கில், கையகப்படுத்தப்பட்ட சொத்துக்களில் முதற்கட்டமாக கட்டிடங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைப் பொது ஏலம் விட நீதிபதி உத்தரவிட்டார். இது பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
நியோ மேக்ஸ் முதலீட்டாளர்கள் நலச்சங்கம் சார்பில் கூட்டாக திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நியோமேக்ஸ் வழக்கில் துரிதமாக செயல்பட்டு அந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் 6500 கோடிக்கு மேல் உள்ள சொத்துக்களை பகிர்ந்து அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை நாங்கள் வரவேற்கிறோம். வரலாற்றிலேயே முதல்முறையாக சிவில் வழக்கை விரைவாக முடித்து வைத்தது என்ற பெருமையை திமுக அரசு பெற்றுள்ளது இதற்காக முதல்வர் இருக்கும் திசையை நோக்கி கையெடுத்து நாங்கள் வணக்கம் தெரிவித்து தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்துள்ள நீதிபதி மற்றும் காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினார்.


0 Comments