திருச்சி ஃபிளாட்டலிக் கிளப் சார்பில் ஜப்பானுக்கு நான்கு யானைகள் விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட நிகழ்விற்கான சிறப்பு அஞ்சல் உறை சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் செயலர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார். தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார்.
நிறுவனர் நாசர், துணைத்தலைவர் காசிநாத், பொருளாளர் தாமோதரன், பிரேம்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.ஜப்பானுக்கு நான்கு யானைகள் விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட நிகழ்விற்கான சிறப்பு அஞ்சல் உறை குறித்து அஞ்சல் தலை சேகரிப்பாளர் சிவகுமார் பேசுகையில், இந்திய கர்நாடகா மாநிலத்தின் பன்னேர்கட்டா உயிரியல் பூங்காவில் வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் நிகழ்வாக, சர்வதேச விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு ஆண் மற்றும் மூன்று பெண் யானைகள் ஜப்பானுக்கு வெற்றிகரமாக கொண்டு செல்லப்பட்டன, இது மாநிலத்தில் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் உயிரியல் பூங்கா கூட்டாண்மைகளில் ஒரு புதிய அத்தியாயம் ஆகும். சுரேஷ் (8), கௌரி (9), ஸ்ருதி (7), மற்றும் துளசி (5) ஆகிய யானைகள் பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து கத்தார் ஏர்வேஸ் சரக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டன.சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கூண்டுகளில் பாதுகாப்பாக அடைக்கப்பட்ட யானைகள் ஒசாகாவின் கன்சாய் இன்டர் நேஷனல் விமான நிலையத்தில் தரையிறக்கினர், அங்கிருந்து லாரி மூலம் ஹிமேஜி சென்ட்ரல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டனர். யானைகளுடன் பயிற்சி பெற்ற ஊழியர்களும் இருந்தனர், அவர்கள் உள்ளூர் கையாளுபவர்கள் விலங்குகளின் பராமரிப்பு நடைமுறைகள் மற்றும் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க தற்காலிகமாக ஜப்பானில் தங்கியிருந்தனர். பன்னர்கட்டாவின் வரலாற்றில் அதன் யானைகள் நேரடி சர்வதேச பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
பெங்களூரு பெக்ஸ் அஞ்சல் தலை கண்காட்சியில் கர்நாடக அஞ்சல் வட்டத்தின் சார்பில், பன்னேர்கட்டாவிலிருந்து ஜப்பானின் ஹிமேஜிக்கு யானைகளை ("ஜப்பானுக்கு ஜம்போக்கள்") விமானம் மூலம் கொண்டு சென்ற நிகழ்வை நினைவுகூறும் வகையில் நவம்பர் 4 மற்றும் 5, 2025 அன்று பெங்களூருவில் நடைபெற்ற கண்காட்சியில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது.அஞ்சல் உறையில் யானைகளின் படங்களும், பயணத்தை சிறப்பிக்கும் வரைபடமும் இடம்பெற்றுள்ளன என்றார்.அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் சிவகுமார், விப்ரா ஸ்ரீ , இளம்வழுதி, முத்துராம் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


0 Comments