திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே சுமார் எழுபது வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிய நிலையில் இருந்தார். அந்நபர் உயிர் காக்க 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருச்சிராப்பள்ளி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
திருச்சி மாநகரம் கோட்டை காவல் நிலைய சட்டம் ஒழுங்குப் பிரிவு காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு கடைகள் வைத்திருக்கும் கடைக்காரர்கள் அந்த பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை செய்ததில் இறந்தவர் குடும்பம் ஏதும் இல்லாமல் அதே பகுதியில் பல ஆண்டுகளாக யாசகம் பெற்று பூட்டிய கடைகள் மற்றும் தெருவோரங்களில் உண்டு உறங்கி வாழ்ந்து வந்ததாக தெரிவித்துள்ளார்கள். இறந்தவருக்கு எந்த ஒரு உறவினர்களும் இல்லை என்றும் அவர் பல ஆண்டுகளாக அந்த பகுதியில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்தவர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேற்படி நபர் இறப்பில் எவ்வித சந்தேகம் இல்லாத சூழலில் உடலை யாரும் உரிமை கோரப்படாத நிலையில் நல்லடக்கம் செய்வதற்காக திருச்சி மாநகரம் கோட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் திருச்சி தென்னூர் குழுமிக்கரை மயானத்தில் கோட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் முன்னிலையில் யோகா ஆசிரியர் விஜயகுமார் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதை உடன் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்தார்.

0 Comments