தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் இன்று நடைபெற்றது. மாநில தலைவர் பழனி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சிறப்பு விருந்தினர்களாக மாநில பொது செயலாளர் கல்யாணகுமார் மற்றும் திருச்சி மாவட்ட டிஎம்சி தலைவர் குணா,தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் பணியாளர் சங்க மாநில பொதுச் செயலாளரும், இந்திய தேசிய சர்க்கரை ஆலை தொழிற்சங்க பேரவை தலைவரும், டாஸ்மாக், ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தின் தலைவருமான இளவரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூடத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன....தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் ஊழியர்களுக்கு, தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும், சம்பளம் மற்றும் பணப்பயன்கள் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ஓய்வூதியம் மட்டும் தமிழக அரசு ஊழியர்களுக்கு நிகராக வழங்கப்படாமல் உள்ளது. எனவே நுகர்பொருள் வாணிபக்கழக ஊழியர்களுக்கு, தமிழக அரசு ஊழியர்களுக்கு இணையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மேலும் இடைக்காலமாக தற்சமயம் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தோடு கூடுதலாக ரூ.9000/-யை சேர்த்து கருணை பென்சனாக வழங்கப்பட வேண்டும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் 1515-த்திற்க்கும் மேற்பட்ட நிரந்தர பணியிடங்கள் காலியாக உள்ளது. தற்போது பணிபுரிந்து வரும் ஊழியர்கள், ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் செய்ய வேண்டிய பணிகளை, ஒருவரே செய்வதால் பணிச்சுமையால் மன உளைச்சலுக்கு ஆட்பட்டுள்ளனர். தொழிற் தகராறு சட்டம் 1947- பிரிவு 12(3)-ன் படி கடந்த 30-01-1997 அன்று ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின்படி கிளாஸ் II மற்றும் கிளாஸ் IV காலிப் பணியிடங்களில் பருவகால கொள்முதல் பணியாளர்களைக் கொண்டு நிரப்பும் பணிகளை உடன் முடிக்க வேண்டும். மேலும் தொழிலாளர் துணை ஆணையர் தலைமையிடம் அவர்களால் வழங்கப்பட்ட தீர்ப்பின்படி 31-12-2016 வரை பணியில் அமர்த்தப்பட்ட பருவகால பணியாளர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும்.
கொள்முதல் நிலையங்களில் நெல் இயக்கம் செய்யும்போது லாரி ஓட்டுநர்கள், மாமுல் கட்டாயப்படுத்துவதற்கு நிரந்தர தீர்வு காணும் பொருட்டு அன்றைய தினமே ஆன்லைன் டோக்கன் கணினியில் பதிவு செய்து கொள்முதல் நிலையங்களில் பயன்படுத்தும் TAB களில் லாரி எண்ணுடன் டோக்கன்போட வழி வகை செய்ய வேண்டும். திறந்தவெளி சேமிப்பு மையங்களில் பழைய காகித முறையை நீக்கி TAB கருவியை பயன்படுத்தி அங்கு இறக்கம் செய்யப்படும் நெல் மூட்டைகளுக்கு TAB மூலமாக ஒப்புகை படிவம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.







0 Comments