திருச்சி மாவட்டத்தில் அதிமுகவிற்குப் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக, அக்கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் தனது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்த, முன்னாள் ஒன்றிய செயலாளர் புங்கனூர் கார்த்தி, தமிழக வெற்றிக்கழக டெல்டா மண்டல பொறுப்பாளரும், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவருமான முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் முன்னிலையில் தன்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்து கொண்டார். அதிமுக முன்னாள் வடக்கு மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளரான வழக்கறிஞர் தேவா ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், புங்கனூர் கார்த்தி அதிகாரப்பூர்வமாக தன்னை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டார். மேலும் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யின் மக்கள் நலக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இந்த முடிவை எடுத்துள்ளேன். இன்னும் ஓரிரு நாட்களில் திருச்சி புங்கனூர் கிராமத்தில் உள்ள அனைத்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஒட்டுமொத்தமாகத் தமிழக வெற்றி கழகத்தில் இணைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள உள்ளேன் என புங்கனூர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அடிமட்டத் தொண்டர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் புங்கனூர் கார்த்தி. முன்னாள் ஒன்றிய கவுன்சிலராகவும், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாவட்டப் பொறுப்பிலும் இருந்த அவர் தற்போது அதிமுகவிலிருந்து விலகியிருப்பது, ஸ்ரீரங்கம் பகுதியில் அதிமுகவிற்குப் பெரும் இழப்பாகவும், திருச்சி புறநகர் அரசியல் வட்டாரத்தில் தவெக-வின் அடுத்தகட்டப் பலமாகவும் பார்க்கப்படுகிறது.


0 Comments