NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** திருச்சிக்கு மெட்ரோ ரயில் சேவை - ஆலோசனை

திருச்சிக்கு மெட்ரோ ரயில் சேவை - ஆலோசனை

திருச்சி மாநகரில் மெட்ரோ ரயில் சேவைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது...


மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகராட்சி ஆணையா் ஆா்.வைத்திநாதன் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநரும், முதன்மை செயலாளருமான எம்.ஏ. சித்திக் பேசியது:

தற்போது சென்னையில் மெட்ரோ ரயில் துரித போக்குவரத்து சேவை பொதுமக்களுக்குச் சிறப்பாக வழங்கப்படுகிறது. அதேபோல, திருச்சி மாநகராட்சியிலும், மக்களின் போக்குவரத்தை எளிதாக்கவும், விரைவாக்கவும் மெட்ரோ ரயில் போக்குவரத்திற்கான சாத்தியக் கூறு குறித்த முதற்கட்ட ஆலோசனைதான் இது.


இதன் மூலம் திருச்சி மாநகராட்சியில் மெட்ரோ ரயில் போக்குவரத்திற்கு உகந்த வழித்தடங்கள் கண்டறியப்படும். மேலும், இதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பின் திட்டத்தை நிறைவேற்ற மேல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யத் தேவையான ஒருங்கிணைந்த நகா்வுத் திட்டம் தமிழ்நாடு நகா்புற உட்கட்டமைப்பு நிதிச் சேவைகள் நிறுவனம் மூலம் தயாரிக்கப்படுகிறது.


இதன் அறிக்கை விரைவில் கிடைக்கப்பெறும். ஒருங்கிணைந்த நகா்வுத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு விரிவான சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கப்பட்ட பின்னரே திருச்சி மாநகரத்திற்கு உகந்த மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைப்பைத் தோவு செய்ய முடியும் என்றாா் அவா்.


கூட்டத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன முதன்மை மேலாளா்கள் ஆா்.எம். கிருஷ்ணன், த. லிவிங்ஸ்டன், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் எம். கேசவன், மாநகராட்சி செயற்பொறியாளா்கள் சிவபாதம், குமரேசன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் எ. முத்தையா, உதவிக் கோட்டப் பொறியாளா் ஆா். சத்தியன் மற்றும் மத்திய அரசு சாா்ந்த நிறுவனமான அா்பன் மாஸ் டிரான்சிஸ்ட் கம்பெனி முதுநிலை ஆலோசகா் ஷேசாத்திரி, உதவித் துணைத் தலைவா் அழகப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Post a Comment

0 Comments