திருச்சி புத்தூர் பகுதியில் இருபத்தைந்து ஆண்டுகளாக பழங்கால புழங்கு பொருட்களின் வரலாற்றை எடுத்துரைத்து வருகிறார் சமூகச் செயற்பாட்டாளரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான யோகா ஆசிரியர் பெ.விஜயகுமார் புழங்கு பொருட்கள் காட்சியகத்தை பத்மஸ்ரீ விருதாளர் சுப்புராமன் பள்ளி தலைமை ஆசிரியர் பிபி அப்துல் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
தமிழர் பண்பாடு, கலாச்சாரம், வாழ்க்கை முறை மற்றும் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் உயரிய நோக்கத்துடன், யோகா ஆசிரியர் பெ. விஜயகுமார் கடந்த 25 ஆண்டுகளாக பழங்கால புழங்கு பொருட்களை சேகரித்து, பாதுகாத்து, அவற்றின் வரலாற்றையும் பயன்பாட்டையும் பொதுமக்களிடம் எடுத்துரைத்து வருகிறார்.
நமது முன்னோர்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்திய வீட்டு உபயோகப் பொருட்கள், வேளாண் கருவிகள், சமையல் சாதனங்கள், அளவைக் கருவிகள், கைவினைப் பொருட்கள் மற்றும் பல்வேறு பாரம்பரிய பொருட்களை சேகரித்து காட்சிப்படுத்தி உள்ளார். இப்பொருட்களின் மூலம் தமிழர்களின் வாழ்க்கை முறை, தொழில் நுட்ப அறிவு, பண்பாட்டு அடையாளம் மற்றும் சமூக வரலாறு குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.
“வரலாற்றை அறியாத சமூகம் தனது வேர்களை இழந்து விடும்” என்ற எண்ணத்துடன், பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், ஆய்வாளர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு புழங்கு பொருட்களின் சிறப்புகளை விளக்கி வருகிறார். ஒவ்வொரு பொருளின் பெயர், பயன்பாடு, தயாரிப்பு முறை, வரலாற்றுப் பின்னணி மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் ஆகியவற்றை எடுத்துரைப்பதன் மூலம் பாரம்பரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
கடந்த 25 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் இக்காட்சியகத்தைப் பார்வையிட்டு பயனடைந்துள்ளனர். இளைஞர்கள் தங்களது பாரம்பரியத்தை அறிந்து மதிக்க வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மறைந்து வரும் பழங்கால பொருட்களை பாதுகாப்பதன் மூலம் தமிழர் வரலாறும் பண்பாடும் அடுத்த தலைமுறையினருக்கு சென்றடைய வேண்டும் என்பதே அவரது முக்கிய இலட்சியமாகும்.
பாரம்பரியத்தைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், அதனை கல்வியுடன் இணைத்து சமூகத்திற்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் பெ. விஜயகுமார், பழங்கால புழங்கு பொருட்களின் வரலாற்றை 25 ஆண்டுகளாக பொதுமக்களிடம் எடுத்துரைத்து, பண்பாட்டு மரபுகளை பாதுகாக்கும் சிறப்பான சமூகச் சேவையை ஆற்றி வருகிறார். அவருக்கு உறுதுணையாக அவரது மனைவி வழக்கறிஞர் சித்ரா, மகள் கீர்த்தனா உறுதுணையாக உள்ளனர்.அவரது இந்த அர்ப்பணிப்பான பணி, தமிழர் பாரம்பரியத்தை நிலைநிறுத்தும் ஒரு முக்கியமான கலாச்சாரப் பணியாக விளங்குகிறது.

0 Comments