திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், அவரது இணையர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், மகள் கீர்த்தனா விஜயகுமார் ஆகியோர் தமிழ் மொழி, கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியத்திற்கான நூலகத்தினை நடத்தி வருகின்றனர்.நூலகத்தினை திருச்சிராப்பள்ளி திருவரங்கம் இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கு அமைப்பின் இயக்குனர் இராச.இளங்கோவன், பொறியாளர் இராஜா ஆகியோர் பார்வையிட்டனர்.
தமிழ் மொழி, கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியத்திற்கான நூலகம் குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்,இல்லத்தின் முகப்பில் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகம் நடத்தி வருகிறோம். இந்நூலகம் நூலகர் இல்லாத நூலகம் ஆகும். ஒவ்வொருவரும் பொறுப்புணர்ந்து தேவையான புத்தகத்தை எடுத்து படித்து புத்தக அலமாரியில் வைக்க வேண்டும். இந்நூலகம்
வாசிப்பை ஊக்குவித்து, சிந்தனைத் திறனை மேம்படுத்தும் அறிவுக்கோயில் ஆகும். நூலகத்தில் மொழி, கலாச்சாரம்,கலை, பண்பாடு என பலதரப்பட்ட புத்தகங்கள் உள்ளன. இவை சமூக வளர்ச்சிக்கும், தனிநபர் ஆராய்ச்சிக்கும் உதவும் வகையில்
நூலகத்துக்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறோம்.
அறிவியல் வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சியால் செயற்கை நுண்ணறிவின் மேம்பாட்டால், சாட்ஜிபிடி போன்ற நிரல்கள் விரவிவரும் இக்காலகட்டத்தில், வாசகர்களுக்குப் பயன் கூட்டுவதற்கான வழிகளைப் பற்றி ஆராய்ந்து வருகிறோம்.
புத்தகங்களைக் கொண்டு, வாசகர் வட்டம் போன்ற பாரம்பரிய நடைமுறைகளைக் கடந்து அடுத்த கட்டத்தை நோக்கி நூலகங்கள் நகர்வது அவசியமாகிறது.
எல்லா துறைகளிலும் மாற்றங்கள் அதிவிரைவில் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. கல்வியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களின் எதிர் காலத்துக்கு, அடிப்படைக் கல்வியைத் தாண்டி, அறிவினைப் பெருக்கும்
நூலகங்களை அனைவரும் பயன்படுத்துவது மூலம் வாசிப்பு மையமாக மட்டுமின்றி கலை, பண்பாடு மையமாக அமைத்துள்ளோம்.
எழுத்து, வாசிப்பு, தமிழறிஞர்களிடம் கலந்துரையாடல் எனப் பல வகைகளில் தொடர்ந்து ஆண்டு முழுவதும் நூலகங்கள் இயங்கும் வகையில் திட்டம் வகுத்து செயல்பட்டு வருகிறோம். பல்லாயிரக் கணக்கில் தமிழ் மொழியில்
அச்சுப் புத்தகங்கள் உள்ளன. கட்டணம் இன்றி நூலகத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொருவரும் ஒரு நூலை அறிமுகம் செய்யலாம்.இதன் மூலம் அனைவரும் அறிவு வளங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். நாள் தோறும் உணவு உண்பது போல, மனிதர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கற்றல் இன்றியமையாதது ஆகும். அனைத்து வயதினருக்கும் , துறையினருக்கும் அவர்களது தேவைகளுக்குத் தக்கவாறு நூலகத்தில் உள்ள நூல்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
நூலகத்தில் என்னென்ன புத்தகங்கள் புதிதாக வந்துள்ளன என்று வாசகர்கள் தெரிந்துகொண்டு வாசகர்கள் பிறருக்கு நூலகத்துக்குப் பரிந்துரைக்கலாம்.
இல்லத்தில் பராமரிக்க இயலாத புத்தகத்தை நூலகத்திற்கு ஒவ்வொருவரும் வழங்கி நூலகத்தின் மேம்பாட்டிற்கு உதவலாம்.வாசிப்பு என்பதை நம்முடைய உயிர் மூச்சாக மாற்றும் வகையில் அனைவரும் இணைந்து செயல்படும்போது, அறிஞர்கள் நிறைந்த அறிவார்ந்த சமூகமாக தழைத்தோங்கும் என்றார்.

0 Comments