திருச்சி மாவட்டம் நவல்பட்டு 100 அடி சாலையில் மின் விளக்கு வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதி - அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பே நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.திருச்சி–புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து குண்டூர் பகுதியில் இருந்து நவல்பட்டு எல்காட் ஐ.டி. பூங்காவை இணைக்கும் 100 அடி சாலையில் இரவு நேரங்களில் மின் விளக்குகள் இல்லாததால் பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சுமார் 5 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சாலையை தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐ.டி. ஊழியர்கள், மத்திய தொழிற்சாலை OFT , துப்பாக்கி தொழிற்சாலை செல்லும் தொழிலாளர்கள், காவலர் பயிற்சி பள்ளி மற்றும் அரசு பள்ளி செல்லக்கூடியவர்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் விமான நிலையம் செல்பவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால் இரவு நேரங்களில் சாலையின் பெரும்பாலான பகுதிகள் முழு இருட்டில் மூழ்கி காணப்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதுடன், சமூக விரோத செயல்கள் நடைபெறக்கூடும் என்ற அச்சமும் பொது மக்களிடையே நிலவுகிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் இரவு நேர பயணிகள் பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் இது குறித்து சமூக ஆர்வலர் ஆர். திருவேங்கடம் கூறுகையில்...
இது தொடர்பாக கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு அரசு துறைகளிடம் மனுக்கள் அளிக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனையுடன் குற்றம்சாட்டினார்
இந்த சாலைக்கு எந்த துறை பொறுப்பு என்பது தெளிவாக தெரியவில்லை. ஒரு துறையிடம் புகார் அளித்தால் மற்றொரு துறைக்கு அனுப்புகின்றனர்.
இறுதியில் யாரும் பொறுப்பேற்காமல் பிரச்சினை நீடித்து வருகிறது என்று அவர் வேதனை தெரிவித்தார்.
எனவே, நவல்பட்டு 100 அடி சாலையின் இருபுறங்களிலும் போதுமான தெரு விளக்குகள் மற்றும் உயர்கோபுர மின்விளக்குகள் (High Mast Lights) அமைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


0 Comments