திருச்சி மாவட்டம் லால்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தாளக்குடி ஊராட்சியின் கீரமங்கலம் பகுதியில் கடந்த ஒரு மாதமாக முறையான குடிநீர் விநியோகம் விநியோகிக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
கீரமங்கலம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு அருகே உள்ள சத்தியம் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணற்றில் இருந்து ராட்சச மின் மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 10 முறை மோட்டாருக்கு செல்லும் மின் ஒயர்கள் அறுத்து திருடப்பட்டதாக ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மேல்நிலைத் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு, குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக கொள்ளிடம் காவல் நிலையத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தாளக்குடி ஊராட்சி செயலர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார் என்பது காவல்துறையினருக்கு தெரிந்திருந்தும், அவர் எப்போதும் போதை நிலையில் இருப்பதால் கைது செய்து சிறையில் அடைத்த பிறகு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்க வேண்டிய சூழல் உருவாகும் என்ற காரணத்தால் நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் விநியோகத்தை பாதிக்கும் வகையில் தொடர்ந்து நடைபெற்று வரும் மின் ஒயர் திருட்டை தடுக்கவும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும் காவல்துறை மற்றும் நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


0 Comments