திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் இந்திய பொம்மலாட்டங்கள் அஞ்சல் தலைகளில் வடிவமைப்பு பிழைகள் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார்.
தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார். நிறுவனர் நாசர், ஜலால், அன்பழக பாண்டியன், முகமது சுபேர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பருந்து பார்வை கொண்ட அஞ்சல் தலை சேகரிப்பாளர் தஞ்சை காசிநாத் இந்திய பொம்மலாட்டங்கள் அஞ்சல் தலைகளில் வடிவமைப்பு பிழைகள் குறித்து பேசுகையில், அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் (Philatelists), அஞ்சல் தலைகள் மற்றும் பிற அஞ்சல் பொருட்களில் இடம்பெறும் வடிவமைப்பு, கருப்பொருள் மற்றும் எழுத்து விவரங்களை மிகுந்த கூர்மையான பார்வையுடன் ஆராய்வார்கள்.
இந்த எட்டு அஞ்சல் தலைகளில் ஒன்றான "ராட் பப்பட் / கத்தி குந்தேய்" (Rod Puppet / Kathi Kundhei) அஞ்சல் தலை, ஆயுதங்களைத் தாங்கிய துர்க்கை அம்மன் உருவத்தை சித்தரிக்கிறது.ஆனால் அந்த வடிவமைப்பில், சங்கு (Conch) மற்றும் கதாயுதம் (Gada) ஆகியவற்றின் நிழல்கள் அவற்றின் உண்மையான நிலைப்பாட்டுடன் பொருந்தாமல் இருப்பதை கண்டறிந்தேன். இது வடிவமைப்பிலும் தரக் கட்டுப்பாட்டிலும் ஏற்பட்ட கவனக்குறைவைக் காட்டுகிறது.
இத்தகைய பிழை ஒரு தேசிய அஞ்சல் தலை வெளியீட்டில் நிகழ்ந்திருக்கக் கூடாது என்பதே அஞ்சல் தலை ஆர்வலர்களின் கருத்தாகும்.கடந்த காலங்களிலும் இதுபோன்ற சில வடிவமைப்புப் பிழைகள் கண்டறியப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, 2017–2018 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ICAR Central Plantation Crops Research Institute சிற்றேட்டில் ஏற்பட்ட வடிவமைப்புப் பிழை காரணமாக, அந்த வெளியீடு திரும்பப் பெறப்பட்டு திருத்திய வடிவில் மீண்டும் வெளியிடப்பட்டது.அதேபோல், சில அஞ்சல் தலைகளில் எழுத்துப் பிழைகளும் இடம்பெற்றுள்ளன. இருப்பினும் அவை திரும்பப் பெறப்படவில்லை. உதாரணமாக, 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட "Auroville International Township" அஞ்சல் தலையில் "Jubilee" என்பதற்கு பதிலாக "Jubliee" என்று தவறாக அச்சிடப்பட்டிருந்தது. அந்தப் பிழை இருந்தபோதிலும், அந்த அஞ்சல் தலை மீளப்பெறப்படவில்லை.இத்தகைய வடிவமைப்பு மற்றும் அச்சுப் பிழைகள், அஞ்சல் தலை சேகரிப்பாளர்களுக்கு அரிய ஆய்வுப் பொருளாகவும், அஞ்சல் வரலாற்றில் தனித்துவமான இடம் பெறும் சேகரிப்புகளாகவும் விளங்குகின்றன. அதே நேரத்தில், எதிர்கால வெளியீடுகளில் மிக உயர்ந்த தரக் கட்டுப்பாட்டை உறுதி செய்ய வேண்டிய அவசியத்தையும் அவை நினைவூட்டுகின்றன என்றார். முன்னதாக அஞ்சல் தலை சேகரிப்பாளர் இளம்வழுதி வரவேற்க, நிறைவாக சிவகுமார் நன்றி கூறினார்.



0 Comments