மருத்துவ உலகின் அதிநவீன தொழில்நுட்பப் புரட்சியாக, உலகின் மிக நீண்ட தூர கண்டம் கடந்த தொலைநிலை ரோபோடிக் அறுவை சிகிச்சையை திருச்சியில் உள்ள டாக்டர் ஜி.விஸ்வநாதன் மருத்துவமனை வெற்றிகரமாக நிகழ்த்தி உலக சாதனை படைத்துள்ளது.
2026 ஜூன் 4 அன்று நடைபெற்ற இந்த வரலாற்றுச் சாதனையின் மூலம், மகப்பேறியல் மற்றும் பொது அறுவை சிகிச்சை ஆகிய இரண்டிலும் ஒரே நாளில் தொலைநிலை ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்த உலகின் முதல் மருத்துவ நிறுவனம் என்ற பெருமையை திருச்சி டாக்டர் ஜி. விஸ்வநாதன் மருத்துவமனை பிரைவேட் லிமிடெட் பெற்றுள்ளது.
பெல்ஜியத்தின் ஜென்ட் பல்கலைக்கழகத்தின் ஆர்சி அகாடமி மற்றும் திருச்சியின் மாம்பழச்சாலையில் உள்ள டாக்டர் ஜி. விஸ்வநாதன் மருத்துவமனை ஆகியவற்றிற்கு இடையே இந்த இரண்டு நேரடி அறுவை சிகிச்சைகளும் நிகழ்த்தப்பட்டன.
பெல்ஜியம் மற்றும் இந்தியா இடையிலான 9,730 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து இந்த அறுவை சிகிச்சை தடையின்றி நடந்து முடிந்துள்ளது. சிக்னல் தாமத நேரம் வெறும் 160 முதல் 217 மில்லி விநாடிகள் மட்டுமே இருந்ததால், அறுவை சிகிச்சை மிகத் துல்லியமாக நடைபெற்றது.
லண்டனில் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றி வருக திருச்சியை சேர்ந்த டாக்டர் ரம்யா கலைச்செல்வன், பெல்ஜியத்தில் இருந்தபடி மெட்பாட் டூமாய் ரோபோவைப் பயன்படுத்தி, இந்த இரண்டு அறுவை சிகிச்சைகளையும் தொலைதூரத்தில் இருந்தே வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளார்.

திருச்சி மருத்துவமனையில் பேராசிரியர் டாக்டர் கோவிந்தராஜ் மற்றும் டாக்டர் முத்துராமன் ஆகியோர் தலைமையிலான உள்ளூர் மருத்துவக் குழுவினர் நோயாளிகளுக்குத் தேவையான நேரடி ஆதரவை வழங்கினர். மேலும் இந்த அறுவை சிகிச்சை குழுவில் டாக்டர் கிருஷ்ணசாமி கண்ணன், டாக்டர் ஹேமாமாலினி கோவிந்தராஜ், டாக்டர் கருணாகரன், டாக்டர் வெங்கட் பரத், டாக்டர் பால பிரசன்னா, டாக்டர் விஸ்வநாதன், டாக்டர் லட்சுமி பிரியா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
முதலாவது மகளிரியல் அறுவை சிகிச்சை இந்திய நேரப்படி காலை சுமார் 11.00 மணிக்குத் தொடங்கி, ஒன்றரை மணி நேரத்தில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. இவ்வளவு நீண்ட தூரத்திற்கு இடையே நடைபெற்ற உலகின் முதலாவது கண்டம் கடந்த தொலைநிலை ரோபோடிக் மகப்பேறியல் அறுவை சிகிச்சை இதுவாகும். இரண்டாவது அறுவை சிகிச்சை இடது பக்கக் குடலிறக்கத்திற்கான அறுவை சிகிச்சையும் ஒன்றரை மணி நேரத்திற்குள் வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு இரண்டு நோயாளிகளும் எந்தவிதப் பக்கவிளைவுகளும் இன்றி பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். தொலைநிலை ரோபோடிக் அறுவை சிகிச்சை மருத்துவத்தில் புவியியல் எல்லைகள் இனி ஒரு தடையல்ல என்பதை இந்தச் சாதனை நிரூபித்துள்ளது. எதிர்காலத்தில், அமெரிக்காவில் உள்ள ஒரு நோயாளிக்கு திருச்சியில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள் மூலம் சிகிச்சை அளிக்க முடியும். அதேபோல், திருச்சி மக்கள் தங்கள் சொந்த நகரத்தை விட்டு எங்கும் பயணம் செய்யாமல், உலகின் எந்தக் கண்டத்தில் உள்ள மருத்துவ நிபுணர்களின் சேவையையும் பெற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
0 Comments