திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் அலைகடலென திரண்ட பக்தர்கள் திருவாரூர் முழுவதும் விழாக்கோலம்.
இந்துமதத்தில் சைவ பீடங்களில் தலைமை பீடமாக திருவாரூர் தியாகராஜர் கோவில் விளங்குகிறது. சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததாக கருதப்படும் இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி.
ஆழித்தேரோட்டம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.தொடர்ந்து விஷேஷ அபிஷேங்கள் மற்றும் சுவாமி வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. முக்கிய நிகழ்ச்சியான ஆழித்தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது. ஆசியாவிலேயே பெரிய தேரான இது 350 டன் எடை கொண்டது. மூங்கில் கம்புகள் கொண்டும் , வண்ண காகிதங்கள் மற்றும் அழகியமலர்கள் கொண்டும் அலங்கரிக்கப்பட்ட தேரானது இன்று காலை 8.10 மணியளவில் வடம்பிடித்து இழுக்கப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. முன்னதாக நேற்று இரவு தியாகராஜ சுவாமி அகுஜா நடத்தில் ஊர்வலம் வந்து தேரில் எழுந்தருளினார். இன்று காலை விஷேஷ பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தேரினை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தனர். . இதை தொடர்ந்து பல்லாயிரகணக்கான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுக்க ஆழித்தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. மக்கள் வெள்ளத்தில் தெருவில் ஆடி அசைந்துவரும் தேரினை காண அழகாக உள்ளது. பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த 2000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வண்டிகளும் தயார்நிலையில் உள்ளன. பக்தர்களின் பாதுகாப்பிற்காக அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதுடன், உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரிய தேரை தொடர்ந்து விளையாகர், முருகன், அம்பாள், மற்றும் சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட 5 தேர்கள் வலம் வந்து கொண்டுள்ளன. 4 வீதிகளையும் சுற்றி வரும் தேரானது இன்று மாலை நிலைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு இடங்களிலும் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு மோர் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் திருவாரூர் முழுவதும் திருவிமா கோலம் பூண்டுள்ளது. இரும்பினால் ஆன சக்கரங்களை கொண்ட முதல் தேர் இது என்பது குறிப்பிடதக்கது.
0 Comments