வாரணாசி கியான்வாபி பகுதியிலுள்ள மசூதியின் பின்பக்க சுற்றுச்சுவரின் வெளியே ஒரு பெண் தெய்வத்தின் உருவம் இருப்பதாகவும் அங்கு தினமும் பூசை செய்ய அனுமதிக்க வேண்டும் என டெல்லியை சேர்ந்த சிலர் வழக்கு தொடுத்தார்கள்.
இதுபற்றி பள்ளிவாசலின் சம்பந்தப்பட்ட வெளிப்புற சுற்றுச்சுவரை ஆய்வு செய்து வீடியோ எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய இரு தரப்பு வழக்கறிஞர்களை கொண்ட குழுவை அமைத்தது உள்ளூர் சிவில் நீதிமன்றம். ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு புறம்பாக, பள்ளிவாசலின் உள்ளேயும் ஆய்வு செய்து வீடியோ எடுக்க முயன்றார்கள். இதை முஸ்லீம் தரப்பு கடுமையாக ஆட்சேபனை தெரிவித்தது. பதற்றம் ஏற்பட்டதால் அன்று பள்ளிவாசலுக்குள் நுழைவது நிறுத்தப்பட்டது.
மறுநாள் முஸ்லீம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. நிவாரணம் கிடைக்கவில்லை.
அடுத்து ஏராளமான போலீசாரை குவித்து, பள்ளிவாசலுக்குள் நுழைந்து வீடியோ எடுத்தார்கள்.

குளத்தில் சிவலிங்கம் என கூறுவது தொழுகைக்கு செல்பவர்கள் கை கால் முகம் கழுவ பயன்படுத்தும் ஹவுது என்ற சிறிய நீர் தொட்டி என கூறப்படுகின்ற நிலையில் இச்செயலை கண்டித்து இந்தியா முழுவதும் இஸ்லாமி அமைப்புகள் பல்வேறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் தெற்கு மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தமீம்அன்சாரி, அசன்பைஜி, சதாம் மஜீத் பகுருதீன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
0 Comments