திண்டுக்கல் மாவட்டம் ஆண்டிப்பட்டி குதிரையாறு அணைவு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி மாணிக்கம். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரா கம்பெனியில் சூப்பர்வைசராக பணி புரியும் சதீஷ் என்பவர் மூலம், திருச்சி மாவட்டம் நவல்பட்டு சோழமாதேவி பகுதியைச் சேர்ந்த ரூபன் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, விவசாயம் தொடர்பாக புதிய டிராக்டர் எடுத்து கொடுத்தால் அதற்கு முன் தொகையாக ₹.60,000, மாத வாடகையாக ₹.10,000 தருவதாக மாணிக்கத்திடம், ரூபன் கூறியுள்ளார். இவரது ஆசை வார்த்தைகளை நம்பிய மாணிக்கம் கடந்த 07.05.2025 அன்று, திண்டுக்கல் பகுதியில் உள்ள மகேந்திரா ஷோரூமில் புதிய டிராக்டரை வாங்கி ரூபனிடம் கொடுத்துள்ளார். அப்போது அக்ரீமெண்ட் எழுதி வாங்கிக் கொண்டு முன் தொகையாக ₹.19,000-ஐ மாணிக்கத்தின் வங்கி கணக்கில் ரூபன் செலுத்தியுள்ளார். அதன் பின்னர் மீதி தொகையை தந்து விடுவதாக கூறி சென்றுள்ளார் ரூபன்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணிக்கம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,..
ரூபன் மாத வாடகைக்கு டிராக்டர் கேட்டதை தொடர்ந்து, மகேந்திரா நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணிபுரியும் சதீஷ் என்பவர் மூலம் லோன் போட்டு வாகனத்தை எடுத்துக் கொடுத்தேன். அதன் பிறகு இன்று வரை வாடகை பணத்தையும், வாகனத்தையும் திருப்பி தரவில்லை. பணத்தையும், வண்டியையும் திரும்ப கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மாணிக்கத்தின் வழக்கறிஞர் கோபிநாத் செய்தியாளர்களிடம் பேசுகையில்,...
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளிடம் ஆசை வார்த்தை கூறி பெரிய திருட்டில் ஈடுபட்டுள்ளனர். டிராக்டர் நிறுவனங்களுடன் ஒன்று சேர்ந்து கொண்டு, புதிய வாகனம் எடுத்து கொடுத்தால் மாத வாடகை தருவதாக கூறி ஏமாற்றி வருகின்றனர்.
இதுபோல 50க்கும் மேற்பட்டவர்களிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளனர். இதில் திருச்சி மாவட்டம் நவல்பட்டு சோழமாதேவி பகுதியைச் சேர்ந்த ரூபன் மற்றும் சுரேஷ் குமார் ஆகியோரும் உள்ளனர்.
இவர்கள் மீது ஏற்கனவே காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர்கள் திண்டுக்கல் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பல பேரை ஏமாற்றி வருகின்றனர். டிராக்டர் எடுத்து கொடுத்தால் மாத வாடகை தருவதாக கூறும் இது போன்ற நபர்களை நம்பி விவசாயிகள், பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றார்.
0 Comments