நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் கே.என்.நேரு போட்டியிடுகிறார். இதனையடுத்து கடந்த 30 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்த அமைச்சர் நேரு தொகுதி முழுவதும் கூட்டணி கட்சியினர் மற்றும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
அந்த வகையில் இன்று திருச்சி மெயின்கார்டுகேட் பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில், காங்கிரஸ் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ், தெற்கு மாவட்ட தலைவர் ராஜலிங்கம், வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து அமைச்சர் கே.என்.நேரு ஆதரவு திரட்டினார்.
அப்போது அமைச்சர் நேரு பேசுகையில்...
துறையூர் தொகுதிக்கான காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். மற்ற தொகுதிகளில் எப்படி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருக்கிறதோ, அதேபோல துறையூர் தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரை உருவாக்குவதற்கு முழு முயற்சி எடுப்போம். காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி சேர வேண்டும் என்று மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலம் முதல் விரும்பியவர்களில் நானும் ஒருவன். நீண்ட காலமாக காங்கிரஸ் திமுக உறவு இருந்து கொண்டுள்ளது. அது இந்த தேர்தலிலும் சிறப்பாக அமைந்துள்ளது. எங்களுக்குள் எந்த பாகுபாடும் இல்லை. அவர்களுடைய உரிமையை கேட்பது அவர்களுடைய உரிமை. நாங்கள் இருவரும் ஒன்றிணைந்து தான் செயல்படுவோம். அனைத்து செயல் வீரர்கள் கூட்டத்திலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த டெல்டா பகுதியில் உள்ள நிர்வாகிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் வேறுபாடு இல்லாமல் எப்படி உழைக்கிறீர்களோ, அதே போல நானும் உழைத்து காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை வெற்றிபெற செய்வேன் என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் கிறிஸ்டோபர் திலக், முன்னாள் மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ் மற்றும்
காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



0 Comments